ராகுல் காந்தி குறித்து.. தேவையில்லாமல் வாயை விட்டு விட்டு.. ஜோக் என்று சமாளித்த காஸ்பரோவ்!

Su.tha Arivalagan
May 04, 2024,05:14 PM IST

மாஸ்கோ: ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி குறித்து தேவையில்லாத கருத்தை வெளியிட்டு தற்போது வாங்கிக் கட்டி வருகிறார். கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தான் சொன்னது ஒரு ஜோக்தான் என்றும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் சமாளித்துள்ளார்.


பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு ஏதாவது சம்பந்தம் இல்லாத வேலைக்கு போகும்போது இப்படித்தான் பலரும் ஏதாவது உளறி விட்டு வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கம். அதற்கு காஸ்பரோவும் விதி விலக்கல்ல. ஒரு காலத்தில் காஸ்பரோவ் மிகப் பெரிய செஸ் சாம்பியன். நம்ம ஊர் விஸ்வநாதன் ஆனந்த் காலத்து செஸ் வீரர். 60 வயதைத் தாண்டி விட்ட காஸ்பரோவ் ரஷ்யாவில்  அரசியலிலும் இருக்கிறார்.




இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி செஸ் விளையாடுவது குறித்த ஒருவரின் கருத்துக்கு பதில் சொல்லும்போது தேவையில்லாமல் வாயை விட்டு விட்டார் காஸ்பரோவ். அந்தப் பதிலில், முதலில் ரேபரேலியில் வெல்லட்டும். பிறகு உயர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கூறியிருந்தார் காஸ்பரோவ். இது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பலரும் வந்து காஸ்பரோவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


இதனால் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார் காஸ்பரோவ். அவர் கூறுகையில், இந்திய அரசியலில் எனக்கு நிபுணத்துவம் கிடையாது. நான் சொன்னது சாதாரண சின்ன ஜோக். அதை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சமாளித்துள்ளார் காஸ்பரோவ்.


2005ம் ஆண்டு செஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டவர் காஸ்பரோவ். ரஷ்ய அதிபர் தேர்தலிலும் கூட போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தவர். 


ராகுல் காந்தி செஸ் நன்றாக ஆடக் கூடியவர். ஓய்வு நேரங்களிலும் தனது பயணத்தின்போதும் மொபைல் போனில் செஸ் விளையாடுவது வழக்கம்.  சமீபத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அவர் மொபைலில் செஸ் விளையாடிய வீடியோவை காங்கிரஸ் க ட்சி வெளியிட்டிருந்தது.  தனக்கு மிகவும் பிடித்த செஸ் வீரர் காஸ்பரோவ் என்றும் ராகுல் காந்தி பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நடப்பு லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். தற்போது உறுப்பினராக உள்ள கேரள மாநிலம் வயநாடு மற்றும் உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். ரேபரேலியில் நேற்றுதான் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம்.


செஸ் உலகில் மறக்க முடியாத சாம்பியன்களில் காஸ்பரோவும் ஒருவர். ஒரு பக்கம் காஸ்பரோவ், இன்னொரு பக்கம் அனடோலி கார்ப்போவ் என்று செஸ் உலகம் அதகளமாக இருந்த சமயம் அது. கிட்டத்தட்ட 255 வாரங்கள் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தவர் காஸ்பரோப். இந்த இரு ஜாம்பவான்களுக்கும் நடுவில் புகுந்து துவம்சம் செய்து உலகையே தன் பக்கம் திரும்ப வைத்தவர்தான் நம்ம ஊரு விஸ்வநாதன் ஆனந்த். இவரது வருகைக்குப் பிறகே செஸ் விளையாட்டில் இந்தியாவின் கொடி உயரப் பறக்கத் தொடங்கியது. ரஷ்யாவின் ஆதிக்கம் தகர்ந்தது என்பது வரலாறு.