உ.பி.யில் பயங்கரம்.. போலீஸ் முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது, தம்பி சுட்டுக்கொலை
பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது மற்றும் அவரது தம்பி அஷ்ரப் அகமது ஆகியோர் ஒரு கும்பலால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தை அதிர வைத்துள்ளது.
பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஊடுறுவிய 3 பேர் கும்பல் மிக மிக நெருக்கத்தில் வைத்து அகமது சகோதரர்களை சரமாரியாக சுட்டதால் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள். மருத்துவப் பரிசோதனைக்காக ஆதிக் மற்றும் அஷ்ரப் அகமதுவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு செய்தியாளர்கள் அவர்கள் இருவரிடமும் பேட்டி கேட்டபோது போலீஸார் அனுமதித்தனர். அந்த சமயத்தில்தான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து விட்டது.
ஆதிக் அகமதுவும், அவரது தம்பியும் பிரக்யாராஜ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருந்த நிலையில், இரு சகோதரர்களும் இப்படிக் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், காவல்துறை மீதான நம்பிக்கையை தகர்க்கும் வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டையும் எழுப்பியுள்ளது.
என்ன கொடுமை என்றால் ஏப்ரல் 13ம் தேதிதான் ஜான்சி நகரில் வைத்து ஆதிக் அகமதுவின் மகன் அசாத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று அவரது இறுதிச் சடங்குகள் நடந்த சில மணி நேரத்தில் ஆதிக் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். இது திட்டமிட்ட படுகொலையாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீஸார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் மான்சிங் என்ற காவலரும் படுகாயமடைந்தார். அவரு்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேரில் ஒருவன் ஆதிக் அகமதுவின் நெற்றியில் குறி பார்த்து சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார் அவர். மற்ற 2 பேரும் தொடர்ந்து சரமாரியாக சுட்டனர். இரு சகோதரர்களும் சுருண்டு விழுந்து மரணமடைந்த நிலையிலும் நிற்காமல் அந்த 3 பேரும் சரமாரியாக இருவரையும் சுட்டுக் கொண்டே இருந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
இந்த கொடூரக் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி நீதி விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் உ.பியின் அனைத்து மாவட்டங்களிலும் வன்முறை மூண்டு விடாமல் தடுப்பதற்காக போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடிக் கட்சி கடும் கண்டனம்
கொல்லப்பட்ட ஆதிக் அகமது சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பியாக இருந்தவர். இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாடிக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ்யாதவ் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் உச்சத்தைத் தொட்டு விட்டன. போலீஸ் பாதுகாப்பில் இருப்பவர்கள் இதுபோல கொடூரமாக கொல்லப்படுவது மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச நிலையை ஏற்படுத்துகிறது. மக்கள் ��ப்படி பாதுகாப்பாக நடமாட முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பய உணர்வு அதிகரித்துள்ளது. மக்கள் பீதியடைந்துள்ளனர். வேண்டும் என்றே இதுபோன்ற சூழலை ஏற்படுத்தி மக்��ளை அச்ச நிலையிலேயே வைத்திருக்க முயல்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.
என்ன பிரச்சினை?
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜு பால் என்பவரது கொலையில் முக்கியமான சாட்சியாக இருந்தவர் உமேஷ் பால் என்பவர். இதனால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இவரும், இவருக்குப் பாதுகாப்பு கொடுத்து வந்த இரண்டு போலீஸாரும் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தூமன்கஞ்ச் பகுதியில் உள்ள உமேஷ் பால் வீட்டுக்கு வெளியே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக உமேஷ் பாலின் மனைவி ஜெயா பால் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் ஆதிக் அகமது, அஷ்ரப் அகமது, ஆதிக் அகமதுவின் மனைவி சாயிஸ்டா பர்வீன், இரண்டு மகன்கள், உதவியாளர்கள் குட்டு முஸ்லீம், குலாம் மற்றும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆதிக் அகமது. மார்ச் 26ம் தேதி அவரை உமேஷ் பால் கொலை வழக்கில்கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் உ.பி. போலீஸார் உத்தரப் பிரதேசம் அழைத்து வந்தனர். இது அந்த மாநிலத்தில் அப்போதே பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
மார்ச் 28ம் தேதி உ.பி. கோர்ட் ஆதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார் ஆதிக் அகமது. இவர் மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. உமேஷ் பால் மட்டுமல்லாமல், ராஜு பாலையும் ஆதிக் அகமது கும்பல்தான் சுட்டுக் கொன்றது. 2005ம் ஆண்டு ராஜு பால் கொல்லப்பட்டார்.