தோளைப் பிடித்து தள்ளி விட்ட பாலகிருஷ்ணா.. But அஞ்சலி தப்பா நினைச்சுக்கலை.. குட் பிரண்ட் என பாராட்டு!

Su.tha Arivalagan
May 31, 2024,10:42 AM IST

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியிடம் பொது விழாவில், மேடையில் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து தான் பெரிதாக பொருட்படுத்தவில்லை, என்.டிஆர் பாலகிருஷ்ணா தனது நீண்ட கால நண்பர் என்று அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார்.


பொது மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சிலர் கவலைப்படுவது கூட கிடையாது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆடியோ லான்ச் விழாவின்போது நடிகர் கூல் சுரேஷ், தொகுப்பாளினி பெண்ணுக்கு மாலை அணிவித்து பொது மேடையை பரபரப்பாக்கினார். அந்தப் பெண் அந்த இடத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து அதே நிகழ்ச்சியில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார் கூல் சுரேஷ்.


இதுபோன்ற சம்பவங்கள் திரையுலகில் அதிகம் நடக்கின்றன. காரணம் பெண் என்ற விஷயத்தை அவர்கள்  "take it for granted" என்று எடுத்துக் கொள்கிறார்கள்.. அதை உரிமையாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கட்டிப்பிடிக்கலாம், முகம் சுளிப்பது போல பேசலாம், அவர்களை வர்ணிக்கலாம், அடிக்கலாம்.. இப்படி பெண்களிடம் நாம் நமது இஷ்டப்படி நடந்து கொள்ளலாம், அது நமது உரிமை என்பது போல சிலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால்தான் பிரச்சினைகள் வருகின்றன. 




அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா  - அஞ்சலி விவகாரமும். கேங்ஸ் ஆப் கோதாவரி என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் பாலகிருஷ்ணா, அஞ்சலி, விஸ்வக் சென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக வம்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் விழாவின்போது மேடையில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அஞ்சலியை சற்று தள்ளி நிற்குமாறு சைகை காட்டினார் பாலகிருஷ்ணா. அதை அவர் சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து அவரது தோள்பட்டையைப் பிடித்து வேகமாக தள்ளி விட்டு ஏதோ சொன்னார் பாலகிருஷ்ணா.


திடீரென தான் தள்ளி விடப்பட்டதால், அதிர்ச்சியான அஞ்சலி அதை முகத்தில் காட்டினார். ஆனால் அதே வேகத்தில் தன்னை தள்ளி விட்டவர் பாலகிருஷ்ணா என்பதால் வேறு வழியில்லாமல் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சமாளித்தார். அதைத் தவிர அவருக்கு அந்த இடத்தில் வேறு வழியில்லை. பாலகிருஷ்ணாவைத் திட்டவும் முடியாது, கோபத்தில் எதுவும் பேச முடியாது, அதிருப்தியுடன் வெளியேறவும் முடியாது.. காரணம், அப்படி எது நடந்தாலும், மொத்தமாக அஞ்சலியின் சினிமா வாழ்க்கையை ஊடி மூற்றி விடுவார்கள்.. இதன் காரணமாக வேறு வழியில்லாமல் சிரித்து சமாளித்தார் அஞ்சலி.


பாலகிருஷ்ணாவைப் புகழ்ந்து தள்ளிய அஞ்சலி:




ஆனால் பாலகிருஷ்ணாவின் செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் அவர் திட்டித் தீர்த்து வருகின்றனர். இப்படியா பொது இடத்தில் நடந்து கொள்வது என்று பலரும் அவரை கண்டித்துள்ளனர். இயக்குநர் ஹர்ஷல் மேத்தா, என்டிஆர் பாலகிருஷ்ணாவை, scumbag என்று ஆவேசமாக வர்ணித்துள்ளார். அஞ்சலிக்கு ஆதரவாக பாடகி சின்மயி உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அஞ்சலி இதற்கு வேறு மாறாக, அதாவது நேர் மாறாக ரியாக்ட் செய்துள்ளார்.


இந்த விவகாரத்தை நேரடியாக குறிப்பிடாமல் அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், கேங்ஸ் ஆப் கோதாவரி பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் மேடையில் அமர்ந்திருந்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அதற்காக அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எப்போதுமே இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்துப் பழகி வருகிறோம். இது நீண்ட கால நட்பு. அவருடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது என்று உசத்திப் பேசியுள்ளார்.


மருந்துக்குக் கூட தள்ளி விட்ட விவகாரம் பற்றி அவர் குறிப்பிடவில்லை. காரணம், அப்படிச் சொல்லி விட்டு அவரால் தெலுங்குத் திரையுலகில் நிம்மதியாக வாழ முடியாது, அழித்து விடுவார்கள். இதனால்தான் அஞ்சலி இப்படி பேசியிருப்பதாக சொல்கிறார்கள்.


என்டிஆர் பாலகிருஷ்ணா இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. ரசிகர்களை அடித்திருக்கிறார். சக நடிகர்களுடன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளார். தனது உதவியாளர்களிடம் அடிதடியாக நடந்துள்ளார். இப்போது அஞ்சலி விவகாரம் வரை இது நீடிக்கிறது.. அவர் திருந்துவார் என்று தெரியவில்லை. ஆனால் பொது இடத்தில் பெண்கள் என்றில்லை, அனைவரிடத்திலும் கண்ணியமாக நடக்க அவர் முயற்சிக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கை.