பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை.. 2.5 லட்சத்திற்கு விற்ற கும்பல் கைது.. கோவையில்!
கோயம்பத்தூர்: பீகாரில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1500க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூரில் உள்ள ஜிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி விஜயன். விஜயனுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த கவலையை பலரிடம் கூறி விஜயன் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த அஞ்சலி- மகேஷ் குமார் தம்பதியுடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பீகார் தம்பதிகள் தங்களிடம் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை உள்ளதாகவும், அந்த குழந்தை தற்போது பீகாரில் உள்ளது என்றும், அதனை பெற்று வர 2.50 லட்சம் செலவாகும் என்றும், அந்த குழந்தைக்கு உங்களுடைய பெயருடன் பிறப்புச் சான்றிதழும் பெற்று தருவதாக கூறியுள்ளனர்.
இதற்கு விஜயனும் சம்மதம் தெரிவித்துள்ளார். அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயிடம் கூறி பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை சூலூருக்கு கொண்டு வந்து ரூ.2.50 லட்சத்தில் பாதி பணத்தை பெற்றுக் கொண்டு குழந்தையை கொடுத்துள்ளார். இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை கடத்தி வரப்பட்ட உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், அஞ்சலி - மகேஷ்குமார் தம்பதிகளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தையை வாங்கிய விஜயன் மற்றும் அஞ்சலியின் தாயார், அஞ்சலியின் சகோதரி ஆகியோரை கைது செய்தனர். தீவிர விசாரணையில் மேலும் சில குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.