களை கட்டியது டெல்லி.. உலகத் தலைவர்கள் குவிந்தனர்.. இன்று ஜி20 மாநாடு!

Su.tha Arivalagan
Sep 09, 2023,09:47 AM IST

டெல்லி:  ஜி20 மாநாடு தொடங்குவதையொட்டி உலகத் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு தலைவரையும் நேரில் வரவேற்று அவர்களை உபசரித்தார். மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வருகை தந்ததும் அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.




அனைத்து உலகத் தலைவர்களுக்கும் இன்று பாரத் மண்டபத்தில் மதிய விருந்து அளித்துக் கெளரவிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் சிறப்பு விருந்து அளித்துக் கெளரவிக்கவுள்ளார்.


முன்னதாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக வந்து விட்டார். மாநாட்டுக்கு வருகை தந்த தலைவர்களை அவர் உற்சாகத்துடன் கை குலுக்கியும், தோளில் தட்டிக் கொடுத்தும் புன்னகை பொங்க வரவேற்றார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


தலைவர்களை வரவேற்ற பூ "மழை"


இதற்கிடையே டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. இது உலகத் தலைவர்களை பூ மழை தூவி வரவேற்பது போல இருந்தது. இந்த திடீர் மழையால் நகரின் வெப்ப நிலை சற்று குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது.


தென் மேற்கு டெல்லியின்  பல பகுதிகளில்  குறிப்பாக வசந்த் கஞ்ச், முனிர்கா, நரேலா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காணப்பட்டது.


ஜி 20 மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.