500 வகை உணவுகள்.. விதம் விதமான சுவையில்.. களைகட்டும் ஜி-20 மாநாடு!
Sep 08, 2023,04:18 PM IST
டெல்லி: 500 வகை உணவுகளுடன் ஜி20 மாநாட்டுக்கு வரும் சர்வதேச தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு விருந்து கொடுத்து அசத்த தயாராக உள்ளது டெல்லி.
சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி20. இந்த அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. ஜி-20 மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடக்க உள்ளது. இதனால் நகரமே களைகட்ட துவங்கியுள்ளது.
டெல்லி நகரம் முழுக்க சாலை சந்திப்புகள், சாலையோர கட்டிடங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் வருகையால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்காக 2 லட்சம் பேர் கொண்ட பாதுகாப்பு படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நம்ம ஊரு பணியாரம், இடியாப்பம்
வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களுக்காக 500 வகை உணவுகள் தயாராகி வருகின்றன. அந்த உணவுகள் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது. சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் உணவுகள், ராகி, கோதுமை, பனியாரம், வாழைப்பூ வடை உள்ளிட்ட 500 வைகயான சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன.
தமிழ்நாட்டின் உணவுகளான இட்லி, தோசை, பணியாரம், இடியாப்பம், ஊத்தாப்பம் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட உள்ளது. இந்த உணவுகளை கைதோர்ந்த சமையல் கலை வல்லுனர்கள் மிகவும் நேர்த்தியாக செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு உணவுக்கும் தேவையான பொருட்களை அந்தந்த ஊர்களிலிருந்தே வரவழைத்துள்ளனராம். கிட்டத்தட்ட1000க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளனராம்.
டெல்லியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இதைக் கட்டுப்படுத்த 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு 17 மத்திய அமைச்சர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.