ஜி20 மாநாட்டிற்கு தயாராகும் டெல்லி.. பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள் மூடல்

Aadmika
Aug 23, 2023,11:49 AM IST

டெல்லி : டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே துவங்கப்பட்டு வருகிறது. ஜி20 மாநாட்டை ஒட்டி டில்லியில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இதற்காக டெல்லி வர உள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி டெல்லியில் உள்ள அனைத்து அரசு, தனியார், முனிசிபல் கார்பரேஷன் அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள், கடைகள் ஆகியன செப்டம்பர் 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை மூன்று நாட்கள் மூடப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 


செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை பொது விடுமுறை விட வேண்டும் என டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர், டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடக்கும் நாட்களில் டெல்லியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.


டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன பிரதமர் ஷி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மாக்ரோன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.