போயிட்டியே.. அழுதபடியே இருந்த கணவர்.. ரயிலிலிருந்து விழுந்து இறந்த கர்ப்பிணி இறுதிச் சடங்கில் சோகம்!
விருத்தாசலம்: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில், வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுத்தபோது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் இறுதி சடங்கு இன்று நடந்தது
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயதான கஸ்தூரி. சென்னையில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. கஸ்தூரி தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளனர். கஸ்தூரிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடக்க இருந்ததால், 2 நாட்களுக்கு முன்னர் அனைவரும் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக ரயிலில் பயணித்தனர்.
ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. அப்போது, காற்றோட்டமாக இருப்பதற்காக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்ட போது நிலைதடுமாறி தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
கஸ்தூரியின் இறுதி சடங்கு இன்று அப்பெண்ணின் சொந்த ஊரில் நடந்தது. இறுதி சடங்கில் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதபடி இருந்தார் கணவன். கஸ்தூரியின் 7 மாதமேயோன உயிரிழந்த ஆண் சிசுவையும் இன்று தாயுடன் சேர்த்தே தகனம் செய்தனர். பார்ப்பவர்களை இதயம் நொறுங்கச் செய்தது இந்த சம்பவம்.
கஸ்தூரி மரணத்தைத் தொடர்ந்து ரயில்களில் அபாயச் சங்கிலி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.