வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

Manjula Devi
Sep 20, 2024,05:25 PM IST

சென்னை:   வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 21ஆம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. 




இந்த நிலையில்  தமிழ்நாட்டில் இன்றும் இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதேபோல் சென்னையில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும். மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாக காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வளிமண்டல மேலெடுக்க சுழற்சி வரும் 23ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.


மறுபக்கம் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 23ம் தேதியுடன் தென் மேற்குப் பருவ மழை விலகும் என்ற தகவலையும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. படிப்படியாக தென் மேற்கு பருவ மழை விலகிய பின்னர் அக்டோபரில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும். இந்த மழைக்காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பெருமளவிலான மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்