அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Meenakshi
Nov 30, 2024,02:12 PM IST

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தென்  கிழக்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியானது புயலாக மாற உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.  இந்த புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திடீர் என புயலின் பாதையில் மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தை நோக்கி வந்தது. வரும் வழியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் புயலாக மாறுமா என்ற சந்தேகத்துடன் நேற்று முன்பு வரை இருந்து வந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காற்றின் வேகம் குறைவாக இருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் புயல் உருவாகாது மழை மட்டும் தான்  இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.




சற்று நேரத்திலேயே இந்த அறிவிப்பு தலைகீழாக மாறி புயலாக உருவானது. பின்னர் இந்த புயல் புதுச்சேரிக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் கரையை கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த பாதையிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு நெருக்கமாக இல்லாமல் மாமல்லபுரத்துக்கு நெருக்கமாக கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


கனமழை வெளுத்து வாங்கி வருவதால், சென்னையில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை முன்கூட்டியே முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்