4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. அப்ளை பண்ணலையா.. கால அவகாசம் நீட்டிப்பு

Meenakshi
Apr 30, 2024,12:11 PM IST

சென்னை:  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த இடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறபட்டன. இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி  நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.


இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15ம்  தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு  முன்னர் அறிவித்தது போன்றே ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்காமல் காத்திருப்போருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிய போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் தேர்வு முறை நடத்தப்படவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2019ம் ஆண்டு உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் முந்தைய விண்ணப்பங்கள் இந்த தேர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி: உதவிப் பேராசிரியர்


காலியிடங்கள்: 3,921 நடப்பு காலிப் பணியிடங்கள், 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


சம்பளம்: மாதம் ரூ.57,700- 1,82,400


கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.