சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பெரும் தீவிபத்து.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Meenakshi
Jun 29, 2024,02:59 PM IST

விருதுநகர்:   விருதுநகர்  மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பட்டாசு அலைகளில், அப்பகுதியில் உள்ள மக்கள் கூலிக்கு பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், சாத்தூர் பதுவார்பட்டியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த பட்டாசு தொழிற்சாலைக்கு இன்று காலை வேலையாட்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் பணி செய்து கொண்டு இருக்கும் போது திடீரென பயங்கர சத்தத்துடன்  வெடிவிபத்து ஏற்பட்டது.




இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது-42), நடுச் சூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (வயது- 44), வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் (வயது-48), மோகன் (வயது-50) ஆகிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மற்ற தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்ட வெளியில் ஓடி வந்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலை இடிந்து சேதமாகியது. உடனடியாக இந்த விபத்து குறித்து தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 


இன்று சனிக்கிழமை என்பதால் அதிகளவில் தொழிலாளர்கள் பணிக்கு வராத காரணத்தால் பெருமளவில் உயிர் சேதம் எதும் ஏற்பட வில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் இதே போல திடீர் விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். இது மட்டும் இன்றி இப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்று வெடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. இது போன்ற விபத்துக்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சி செய்து செயல்பட்டால் மட்டுமே அப்பாவி மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.