திருப்பதி லட்டு விவகாரத்தில்.. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உட்பட.. 4 பேர் அதிரடி கைது!
திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்தாக தொடரப்பட்டுள்ள வழக்கில், தமிழ்நாட்டைச் சேரந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட நான்கு பேரை சிபிஐ சிறப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதியில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வக அறிக்கையில் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பதி புனிதத் தன்மை இழந்ததாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுநல வழக்காக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ஆந்திரா அரசு அமைத்திருந்த விசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என அறிவித்து உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, ஐந்து அதிகாரிகள் கொண்ட சிபிஐ சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நெய் பொருட்களை வழங்கிய திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பாபா டெய்ரி நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பில் நெய் விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரன், உத்தரகாண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விபின் ஜெயின், பொம்மில் ஜெயின், அபூர்வா சவ்டா என நான்கு பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட நான்கு பேரை சிபிஐ போலீசார் திருப்பதி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ நெய் 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 320 ரூபாய்க்கு நெய் சப்ளை செய்வதற்கு எவ்வாறு ஒப்பந்தம் பெற்றீர்கள். இதில் கலப்படம் செய்யப்படவில்லை என்பதை எவ்வாறு உறுதி செய்கிறீர்கள் என தொடர்ச்சியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை. இதனை அடுத்து திண்டுக்கல் நிறுவனர் ஏ ஆர் டெய்லி நிறுவனர் ராஜசேகர் உட்பட நான்கு பேரையும் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து திருப்பதியில் உள்ள கிளை சிறைக்கு நான்கு பேரும் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்