கிரிக்கெட்டில் அழுத்தமான முத்திரை பதித்த... ஹீத் ஸ்ட்ரீக்!

Su.tha Arivalagan
Aug 23, 2023,10:20 AM IST
ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், வங்கதேச கிரிக்கெட்  அணியின் முன்னாள் பயிற்சியாளருமான  ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்தார்.

49 வயதேயாகும் அவரது மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அற்புதமான கிரிக்கெட் வீரர் ஸ்ட்ரீக். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ட்ரீக் சிகிச்சை பலனளிக்காமல் மறைந்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒரு நாள் போட்டிகள் விளையாடியுள்ளார் ஸ்ட்ரீக். டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்களுக்கு மேலும் 1000 ரன்களும் எடுத்த ஒரே ஜிம்பாப்வே வீரர் இவர்தான்.  அதேபோல ஒரு நாள் போட்டிகளிலும் 200 விக்கெட்களுக்கு மேலும் 2000 ரன்களுக்கு மேலும் குவித்த வீரரும் இவர் மட்டுமே.



இவர் செய்த பல அற்புதங்கள், சாதனைகள் ஜிம்பாப்வே வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட்டை நேசிக்கும் அத்தனை பேருக்குமே உத்வேகம் அளிப்பதாகும்.

கடந்த மே மாதத்திலிருந்தே ஸ்ட்ரீக்கின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.  ஸ்ட்ரீக்கின் மறைவுக்கு உலகக் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.