கருணாநிதி காலத்தில் கவர்னராக இருந்த.. பாத்திமா பீவி  காலமானார்.. 96 வயதில்!

Su.tha Arivalagan
Nov 23, 2023,01:16 PM IST

திருவனந்தபுரம்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு ஆளுநராக செயல்பட்டவரான பாத்திமா பீவி வயோதிகம் காரணமாக காலமானார். அவருக்கு வயது 96.


கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. தமிழ் ராவுத்தர் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.  1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்த பாத்திமா பீவி திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர். அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு வக்கீலாக தனது பணியை தொடங்கினார். வக்கீல் பதவியிலிருந்து பிறகு முன்சிப்பாக உயர்ந்தார். துணை நீதிபதி, மாவட்ட மேஜிஸ்ட்ரேட் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதியாக பதவி வகித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியானார். 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.


உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக செயல்பட்டார். அப்போதுதான் மறைந்த கருணாநிதியின் விருப்பத்தின் பேரில் தமிழ்நாடு ஆளுநராக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசுக்கும், பாத்திமா பீவிக்கும் இடையே நல்லுறவு நீடித்தது. இருப்பினும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாலிஹு என்பவரை பாத்திமா பீவி நியமித்தது தொடர்பாக அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே கடும் பூசல் வெடித்தது. இந்த விவகாரத்தால் கருணாநிதி, பாத்திமா பீவி இடையிலான நல்லுறவும் முறிந்து போனது.




தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விடை பெற்று பாத்திமா பீவி செல்லும்போது, தமிழ்நாட்டை ஆண்டவன்தான் காப்பாற்ற  வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறி விட்டுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.  1997ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராக செயல்பட்டார் பாத்திமா பீவி.


உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி, ஆசிய நாடுகளின் உச்சநீதிமன்றம் ஒன்றில் நீதிபதவியாக பதவி வகித்த முதல் பெண் என்று பல பெருமைகள் பாத்திமா பீவிக்கு உண்டு. வயோதிகம் காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார் பாத்திமா பீவி.