பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

Su.tha Arivalagan
Feb 22, 2025,07:06 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் சக்திகாந்த தாஸ். தமிழ்நாட்டில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் கடைசியாக ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார். அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசின் நியமனக் கமிட்டி வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரையிலும் அல்லது மறு உத்தரவு வரும் வரை இப்பொறுப்பில் சக்திகாந்த தாஸ் நீடிப்பார் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாட்டில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், தமிழ்நாடு குறித்து நன்கு அறிந்தவருமான சக்திகாந்த தாஸின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.




2018ம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். 6 ஆண்டு காலம் இப்பொறுப்பில் அவர் நீடித்தார். நிதி, வரி விதிப்பு, தொழில்துறை, அடிப்படைக் கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்தவர், நாற்பது ஆண்டு கால அனுபவம் உடையவர்.


கொரோனா காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக நெருக்கடியான காலகட்டத்தில் பதவி வகித்தபோது, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர். நாட்டின் கடுமையான நிதிச் சூழலிலும் திறம்பட பணியாற்றி பலருடைய பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதி ஆயோக் சுப்ரமணியம் பதவிக்காலமும் நீட்டிப்பு


இதேபோல  நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியாக இருந்து வரும் பிவிஆர் சுப்ரமணியத்தின் பதவிக்காலமும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ்  அதிகாரியான சுப்ரமணியம் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி ஆயோக்கின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஒரு ஆண்டுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.