நவீன இந்தியாவின்.. பொருளாதார சீர்திருத்த தந்தை.. மன்மோகன் சிங்.. ராஜ்யசபாவிலிருந்து இன்று ஓய்வு!

Su.tha Arivalagan
Apr 03, 2024,08:46 AM IST

டெல்லி: நவீன இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த தந்தை என்று தாராளமாக டாக்டர் மன்மோகன் சிங்கைப் பாராட்டலாம். அவர் இன்று ராஜ்யசபா எம்.பி பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரது 33 வருட கால நாடாளுமன்ற அரசியலும் இன்றுடன் முடிகிறது. வயோதிகம் காரணமாக அவர் மீண்டும் எம்.பி பதவியில் அமர்த்தப்படவில்லை.


மன்மோகன் சிங் என்றென்றும் ஹீரோவாக மக்கள் மனதில் கோலோச்சுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகழ்ந்துள்ளார். மன்மோகன் சிங்கை ஒரு காங்கிரஸ்காரராக சுருக்கிப் பார்க்க முடியாது. அவர் இந்தியாவுக்கான தலைவர்.. இந்தியாவின் பிரதமராக அவர் இருந்தபோது மட்டுமல்லாமல், அதற்கு முன்பு நிதியமைச்சராக பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இருந்தபோதுதான் நவீன இந்தியாவுக்கான பொருளாதார ராஜபாட்டை திறந்து விடப்பட்டது. அன்று தொடங்கிய தொடர் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்தான் இந்தியாவை வலிமையான ஒரு பொருளாதார சக்தியாக மாற உதவியது.




அவர் வகுத்துக் கொடுத்த பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள்தான் இந்திய மக்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்தியது. மன்மோகன் சிங் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு அருமையான திட்டம்தான் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்.. அதாவது 100 நாள் வேலைத் திட்டம். இந்தத் திட்டமானது கிராமப்புற பெண்களுக்கு மிகப் பெரிய உயர்வைக் கொடுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


நடுத்தர வகுப்பு மக்களும், ஏழ்மை நிலையில் இருந்த மக்களும், இளைஞர்களும் மிகப் பெரிய பலனை மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அடைந்துள்ளனர். தீவிர அரசியலிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் கூட மன்மோகன் சிங்கின் திட்டங்கள் மக்களை தொடர்ந்து ஆளும் என்பதில் சந்தேகம் இல்லை.


மக்களின் அன்பை சம்பாதித்த மன்மோகன் சிங்




நிதித்துறை, கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, வங்கிகள் என இவர் மன்மோகன் சிங் காலத்தில் அனைத்துத் துறைகளும் மிகப் பெரிய மறுமலர்ச்சியைக் கண்டன. முந்தைய வாஜ்பாய் அரசு கொண்டு வந்த தங்க நாற்கரத் திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி நாடு முழுவதும் சாலைக் கட்டமைப்பை மிகப் பெரிய வளர்ச்சிக்கு கொண்டு வந்தார் மன்மோகன் சிங். இவரது ஆட்சிக்காலத்தில் பல முக்கியமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அனைத்துமே மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பலன் கொடுத்தது.. அதில் முக்கியமானது தகவல் அறியும் உரிமை சட்டம். மக்களுக்குக் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய அதிகாரமாக இது இன்று வரை பார்க்கப்படுகிறது.


தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர் மன்மோகன் சிங். தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கு மன்மோகன் சிங் குடும்பம் இடம் பெயர்ந்தது.  தற்போது மன்மோகன் சிங்குக்கு 91 வயதாகிறது. இத்தனை காலமும், தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராகவே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 முறை அவர் பிரதமர் பதவியை வகித்துள்ளார். 1991 முதல் 2019 வரை அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தும், 2019 முதல் 2024 வரை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்தும் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன் சிங். 


அதிக முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தாலும் கூட, லோக்சபா தேர்தலில் ஒருமுறை கூட போட்டியிடாத நிலையிலும் கூட இந்திய மக்களின் அபரிமிதமான அன்பையும் செல்வாக்கையும் சம்பாதித்துள்ளார் மன்மோகன் சிங். காரணம், ஒரு பிரதமராக அவர் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களும் சட்டங்களும்தான்.  அதிக முறை பிரதமர் பதவியில் இருந்த  இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங் மட்டுமே. இந்தியாவின் முதல் இந்து அல்லாத பிரதமரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு அடுத்து அதிக வருடங்கள் பிரதமராக இருந்த பெருமையும் மன்மோகன் சிங்குக்கே உண்டு.