பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்.. நாட்டை விட்டு வெளியேறி.. 4 ஆண்டுகளுக்குப் பிறகு!
Oct 21, 2023,04:39 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை விட்டு வெளியேறி, கடந்த 4 வருடமாக இங்கிலாந்தில் குடியேறி அங்கு வசித்து வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இன்று நாடு திரும்பினார்.
பாகிஸ்தான் பிரதமராக 3 முறை பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். 1990ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவர் அப்போது கிட்டத்தட்ட 3 வருட காலம் மட்டுமே பதவி வகித்தார். பின்னர் 1997ம் ஆண்டு மீண்டும் பிரதமரான நவாஸ் ஷெரீப், இந்த முறை 2 வருட காலம் 237 நாட்கள் பிரதமராக இருந்தார். 3வது முறையாக 2013ம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த நவாஸ் ஷெரீப், இம்முறை நாலே முக்கால் ஆண்டு காலம் பதவியில் இருந்தார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் நவாஸ் ஷெரீப். கைது நடவடிக்கைக்குப் பயந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பாகிஸ்தானை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்குப் போய் அங்கு வசித்து வந்தார். அதன் பின்னர் நவாஸின் தம்பி ஷபாஸ் ஷெரீப் பிரதரமானார். அப்போது நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வரவில்லை. இந்த நிலையில் தற்போது இடைக்கால பிரதமர் வசம் பாகிஸ்தான் உள்ள நிலையில் தாயகம் திரும்பியுள்ளார் நவாஸ் ஷெரீப்.
தனி விமானம் மூலம் இஸ்லாமாபாத் திரும்பினார் நவாஸ் ஷெரீப். ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். இதில் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆனால் 4வது முறையாக பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும். பாகிஸ்தான் வரலாற்றில் யாரும் நவாஸ் ஷெரீப் போல அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.