சுவாமி சிலைகளை உடைக்கும் விஷமிகள்.. இதயம் நொறுங்குகிறது.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!

Su.tha Arivalagan
Sep 21, 2024,06:10 PM IST

சென்னை:   புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோவில் மலைப் பாதையில் சுவாமி சிலைகளை சில விஷமிகள் உடைத்துப் போட்டிருக்கும் செயல் இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலை உச்சியில் புகழ் பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. புகழ் பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்தக் கோவிலில் சுவாமி சிலைகளை சில விஷமிகள் மலைப் பாதையில் உடைத்துப் போட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.




இதுதொடர்பாக ஒரு வீடியோவுடன் அவர் எக்ஸ் தளத்தில் பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


பெருமைமிகு நமது விராலிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் மலைப்பாதையில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இதயத்தை நொறுங்கச் செய்கிறது. கடும் கண்டனத்துக்குரிய இழிவான இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.


விராலிமலை முருகனை தரிசிக்க தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, மலையேற சிரமப்படும் பக்தர்கள் கவலைபோக்கிட அதிமுக ஆட்சியில் எழில்மிகு சுவாமி சிலைகளுடன் விசாலமான மலைப்பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 வருடங்களில் மட்டும் மூன்று முறை இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று பக்தர்களை அச்சம் கொள்ள செய்திருக்கிறது.




சிரமேற்கொண்டு அமைக்கப்பட்ட மலைப்பாதையை தமிழக அரசு முறையாக பாதுகாக்க தவறியது கவலையளிக்கிறது. இனியாவது, இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்தி, கோவிலைச் சுற்றி ரோந்து பணிகளை காவல்துறை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்