செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு.. நாளை மறு நாளுக்கு ஒத்திவைப்பு.. அன்றே இறுதி விசாரணை

Meenakshi
Jul 10, 2024,02:47 PM IST
டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 12ம் தேதி (நாளை மறு நாள்) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.  இவர் பணம் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணைக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
                                                                                     

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் வழக்கு உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்காமல் பல முறை இந்த வழக்கை ஒத்தி வைத்ததாக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிய மனு இதுவரை 3 முறை ஒத்திவைத்துள்ளதாகவும். விரைந்து ஜாமீன் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கால அவகாசம் கோரியதை அடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான்  தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. அத்துடன் இந்த வழக்கு நாளை மறுநாள் ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்தப்படும், அன்றே இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.