அதிமுகவை பின்னுக்குத் தள்ளி விட்டு.. பாஜகவுக்கு 2வது இடத்தைக் கொடுத்த ப.சிதம்பரம்.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு இங்கு வேலையே இல்லை. இங்கு நடைபெறும் மோதல் என்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையில்தான் என்று கூறியுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் 3 கூட்டணிகள் களம் கண்டுள்ள நிலையில், நான்காவது அணியாக நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை தங்களுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் போட்டியே. இங்கு பாஜகவுக்கு இடமில்லை என்று பேசி வருகிறார்கள். மறுபக்கம் அதிமுகவினரோ, திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி. இது வட மாநிலம் கிடையாது. தமிழ்நாடு. இங்கு பாஜக எங்களுக்கெல்லாம் போட்டியாக, மாற்றாக வர முடியாது. திமுக அதிமுக, அதிமுக திமுக இப்படித்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சற்று மாற்றிப் பேசியுள்ளார். தேர்தல் களத்தில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையில்தான் போட்டியே நிலவுகிறது. இங்கு அதிமுகவுக்கு எந்த வேலையும் இல்லை என்று அதிமுகவை 3வது இடத்தில் வைத்துப் பார்த்துப் பேசியுள்ளார் ப.சிதம்பரம். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ப.சிதம்பரம்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியின்போது கூறுகையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம். புதுச்சேரியிலும் வெல்வோம். இது மக்களவைக்கு நடைபெறும் தேர்தல். இங்கு அதிமுக போன்ற கட்சிகளுக்கு இடமில்லை. அவற்றுக்கு இதில் வெல்வது என்பது பொறுத்தமற்றது.
அதிமுக ஒரு சீட்டோ அல்லது 2 சீட்டோ வெல்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் என்ன நடந்து விடும்.. கடந்த முறை தேனி தொகுதியில் மட்டும் வென்றனர். நாடாளுமன்றத்தில், மக்களவையில், அவர்களுக்கு கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது. அந்த உறுப்பினரும் பொருத்தமற்றவராகவே இருந்தார். எனவே இந்த முறையும் அதுவே நடக்கும்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆகியவை மட்டுமே களத்தில் உள்ளன. மற்ற கட்சிகள் பொருத்தமற்றவைதான். அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், அதிமுகவுக்கு இங்கு வேலையில்லை.
மீண்டும் பாஜக வரக் கூடாது
பாஜகவுக்கு 3வது முறை ஆட்சியைத் தரக் கூடாது. கடந்த 10 வருடம் அவர்கள் ஆட்சி புரிந்தனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தனர். தமிழ்நாட்டை ஏமாற்றினர், மோசடி செய்தனர். தமிழகத்திடமிருந்து கிடைத்த வருவாயைப் பெற்றுக் கொண்டு, பதிலுக்கு 29 பைசாவை மட்டுமே திரும்பக் கொடுத்தனர்.
மத்திய அரசு வெள்ள நிவாரணத்தை கூட தர மறுத்து விட்டது. இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி இதுபோன்ற விஷயங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதைக் கூட மத்திய அரசு தரவில்லை. சென்னை, தூத்துக்குடியில் டிசம்பரில் பேரிடர் நடந்தது. இப்போது ஏப்ரல் வந்து விட்டது. இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை.
கட்டுப்படுத்தப்பட முடியாத பண வீக்கம், விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்.. இதுதான் கடந்த 10 வருட கால பாஜக ஆட்சியின் சானை. எனவேதான் சொல்கிறோம், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது எனார் ப.சிதம்பரம்.