பிரதமர் எத்தனை முறை வந்தாலும்.. பாஜக வாக்கு வங்கி 3% தாண்டாது.. சொல்கிறார் ஜெயக்குமார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பாஜக வாக்கு வங்கி 3 சதவீதத்தைத் தாண்டாது என முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை விரைவுபடுத்தியுள்ளன. அதிமுக, பாஜக கூட்டணிகளை இறுதி செய்ய பேச்சு நடத்தி வரும் நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் அண்ணாமலை நடத்தி வந்த என் மண் என் மக்கள் யாத்திரை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனை பிரமாண்ட நிகழ்வாக நடத்தியுள்ளது பாஜக. கோவை பல்லடத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அதிகாரத்தில் இல்லை. ஆனாலும் பாஜகவின் இதயத்தில் எப்போதும் தமிழ்நாடு இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளும் இதை உணர்ந்துள்ளனர், புரிந்துள்ளனர். அதுகுறித்த விழிப்புணர்வுடன் அவர்கள் உள்ளனர்.
இந்த மாநிலத்தை பல காலமாக ஊழல்களால் கொள்ளையடித்தவர்கள் இதனால்தான் பாஜகவைப் பார்த்துப் பயப்படுகின்றனர். பாஜக வளர்வதைப் பார்த்துப் பயப்படுகின்றனர். பாஜக அதிகாரத்திற்கு வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர் என்று ஆவேசமாக கூறினார். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சிகளையும் அவர் புகழ்ந்து பேசினார்.
அதிமுக வாக்கு வங்கிக்குக் குறி வைக்கும் பாஜக
இதுகுறித்து சென்னையில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்ல கூட்டணி எங்கள் தலைமையில் அமையும். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த 2 நாட்களில் எல்லாம் தெரிந்து விடும்.
பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜாக வாக்கு வங்கி 3 விழுக்காட்டை தாண்டாது. அண்ணாமலை பில்டப் கொடுக்கிறார். சில மீடியாவை கையில் வைத்துக் கொண்டு பில்டப் கொடுத்தாலும் 3 விழுக்காட்டிற்கு மேல் பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை.
அவர்கள் திட்டுவார்கள்.. நாங்களும் திட்டுவோம்
எங்களை அவர்கள் திட்டுவார்கள்.. எங்கள் ஆட்களும் அவர்களை திட்டுவார்கள். ரிசல்ட் வரும் போது தான் தெரியும், தேசிய கட்சிகளுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிடம் vs திராவிடம் என்பது தான் நிதர்சனம். எங்களுக்கு எதிரி திமுக. திமுகவை விழ்த்துவது தான் எங்கள் வேலை. பாஜக எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது என்று கூறியுள்ளார்.