சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.. விரைவில் நல்ல முடிவு தெரியும்.. ஓ.பன்னீர் செல்வம்

Su.tha Arivalagan
Jul 18, 2024,01:38 PM IST

சென்னை:   சசிகலா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நானும் தொண்டர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் அதிமுக குறித்த முடிவு தெரியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஓ.பி.எஸ்ஸை விட 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த  நிலையில் இந்த வெற்றியை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடரப்பட்டது.


தேர்தல் வழக்கு தொடருவதற்கான கடைசி நாள் இன்று என்பதால் ஓ.பி.எஸ் நேரில் வந்து வழக்கைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது அதிமுக இணைப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக இணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். நாங்களும் அதையேதான் சொல்கிறோம். எம்ஜிஆர் முதல், ஜெயலலிதா வரை எங்களை இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினர். இந்த இயக்கம் ஜனநாயக முறைப்படி தொண்டர்களுக்கான இயக்கமாக இருக்க வேண்டும்.




இயக்கம் பிளவுபட்டிருப்பது ஜனநாயகத்திற்கு ஆதரவான சக்திகளுக்கு எதிரானதாக இருக்கும் என்பதால் இணைய வேண்டும் என்று சொல்கிறோம். எங்களை இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் போய் எடப்பாடி பழனிச்சாமியிடம் சொன்னோமா.. இல்லையே.. அவராகவே கேள்வி கேட்டுக் கொண்டு அவராகவே பதில் அளிப்பது கண்டனத்துக்குரியது. அதிமுக குறித்து விரைவில் முடிவு தெரியும். தொண்டர்களுடன் நான் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். சசிகலாவின் சுற்றுப் பயணம் வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.


காவிரி பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வைத்தவர் ஜெயலலிதாதான். தீர்ப்புக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தவர் அவர்தான். இரண்டு ஆணையங்கள் அமைக்கக் காரணமாகவும் அமைந்தவர் ஜெயலலிதாதான். தமிழகத்திற்கு உரிமையை பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா.  அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அதை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.


இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது. இந்தியா கூடடணியில்தான் திமுக உள்ளது. முதல்வரும் இருக்கிறார். பலம் வாய்ந்த கட்சியாக இந்தியா கூட்டணியில் இருப்பதால் மாதாந்திர அடிப்படையில் நமக்கான தண்ணீரை பெற வேண்டியது முதல்வரின் கடமை என்றார் ஓ.பன்னீர் செல்வம்.