எங்களைப் பற்றி பேசுவதை.. நிறுத்திக் கொள்ள வேண்டும்.. ஆர்.பி. உதயகுமாருக்கு.. ஓபிஎஸ் எச்சரிக்கை!
சென்னை: அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் இனி எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் இணைய விரும்பினால் ஓ.பன்னீர் செல்வம் ஆறு மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும். அவரை கட்சியில் இணைப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் மதுரை மேயரும், அதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தார்.
மறுபக்கம், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஆர்பி உதயகுமார் ஓ. பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். அவர் கூறுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது பதவி பறிபோகும் என்ற சூழ்நிலை வந்த உடனேயே உச்சபட்ச பாவச் செயலாக இரட்டை இலையை எதிர்த்து மூன்று முறை தன்னை முதலமைச்சராகிய கட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போட்டியிட்டது எந்த வகையில் நியாயம்.
அதிமுகவை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதியில் தனியாக எப்படி போட்டியிட்டலாம். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட இவர், இரட்டை இலையை பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் ஒரு விஷப்பரிட்ச்சைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மீண்டும் விரும்ப மாட்டார்கள். அவரை மீண்டும் அதிமுகவிலேயே சேர்ப்பது தொடர்பாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போத அவர் கூறுகையில், அதிமுகவில் என்னுடைய விசுவாசத்திற்கு ஜெயலலிதா நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சி நலன் கருதி தான் பிரிந்து கிடக்கின்ற அதிமுகவினர் அனைவரும் இணைய வேண்டும் என்று சொன்னேன்.
என்னை அழைத்துக்கொண்டு போய் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்ய இதுவரை நான் யாரிடமும் சொன்னதே கிடையாது, சொல்லவும் மாட்டேன். ராஜன் செல்லப்பா அண்ணன் அதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்காக யாரும் பரிந்து பேச வேண்டிய தேவையில்லை.
டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் பாசறையுடைய மாநில செயலாளராக இருந்தபோது என் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப்பையும் அழைத்து யாராவது ஒருவர் தேனி மாவட்டத்தின் செயலாளர் ஆக போட்டியிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். என் மகன்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். வெங்கடேஷ் அவரை சந்திக்க சென்ற போது வெங்கடேசன் அவர்கள் எந்த சோபாவில் உட்கார்ந்து இருந்தார் உதயகுமார் அப்போது எந்த நிலையில் இருந்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது.
டாக்டர் வெங்கடேஷ் அவர்களிடம் நான் சொன்னது தயவுசெய்து என் மகனை மாவட்ட செயலாளராக போட வேண்டாம் என கூறினேன். ஏன் என்று கேட்டார். வாரிசு அரசியல் என்று சொல்வார்கள் எதிர்க்கட்சிகள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பக்கத்தில் நான் இருப்பதனால் வாரிசு என்று சில பிரச்சினைகளை கிளப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றேன். மீண்டும் வெங்கடேசன் அவர்கள் மாண்புமிகு அம்மா அவர்களிடம் வந்து பன்னீர்செல்வம் அவர்களின் மகன்களில் யாராவது ஒருவரை பதவியில் அமர வைப்போம் என கூறியதற்கு வேண்டாம் என மறுக்கிறார். அம்மா அவர்களும் ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய், போட்டியிட சொல்லுப்பா. ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் சொன்னேன்னு பன்னீர்செல்வத்திடம் சொல்லு என்றிருக்கிறார்.
என்னிடம் மீண்டும் வெங்கடேஷ் அவர்கள் அம்மாவே சொல்லிவிட்டார்கள் என்றார். இதை நான் மறுப்பதற்கு இல்லை. அப்படித்தான் வந்தது. 2008 காலத்தில் நான் தான் பன்னீர்செல்வத்தின் மகன்களை மாவட்ட செயலாளராக போடுவதற்கு உத்தரவிட்டேன் என்று கூறியிருக்கிறார். மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அடையாளம் தெரிந்தால் போதும். உதயகுமார் போன்றோருக்கு தெரிய தேவை இல்லை.
எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அவர் எப்படி வந்தார் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக அம்மாவே உத்தரவு போட்டதுக்கு பின்னால் யாருடைய சிபாரிசும் எங்களுக்கு தேவையில்லை. இனிமேல் உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.