70 கிலோ கேக் வெட்டி.. முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன்.. பிறந்த நாள் கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமி!

Su.tha Arivalagan
May 12, 2024,10:31 AM IST

சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனஇது 70வது பிறந்த நாளை இன்று கட்சியினருடன் பிரமாண்ட கேக்  வெட்டிக் கொண்டாடினார்.


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று 70வது பிறந்த நாள் ஆகும். இதை அதிமுகவினர் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.  வெயில் கொளுத்தி வருவதால் தன்னைக் காண்பதற்கு யாரும் வந்து அலைய வேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று சேலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


70 கிலோ கேக் வரவழைக்கப்பட்டு அதை எடப்பாடி பழனிச்சாமி வெட்டினார். பின்னர் கேக் துண்டுகளை அவர் கட்சியினருக்கு வழங்கி மகிழ்ந்தார். பிறகு தொண்டர்களுக்கு தென்னங்கன்று உள்ளிட்ட மரக் கன்றுகளை வ ழங்கினார். தமிழ்நாடு முழுவதும் மோர்ப்பந்தல்கள் அமைத்தும், அன்னதானம் வழங்கியும் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், தேர் இழுத்தல், அன்னதானம், நலத் திட்ட உதவிகள் வழங்குதல் என்று அதிமுகவினர் தடபுடலாக எடப்பாடியார் பிறந்த நாளைக்  கொண்டாடி வருகின்றனர்.


அன்னையர் தின வாழ்த்துகள்




இதற்கிடையே, இன்று அன்னையர் தினம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.


போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.