அதிமுகவின் தொடர் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்!
சென்னை: அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்விக்கு ஒற்றை தலைமை தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,
அம்மா அவர்கள் இருந்த வரை கழகம் எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்கே தெரியும். அதற்குப் பின்னால் நடைபெற்ற அரசியல் சூழ்ச்சிகள், வஞ்சனைகள், நம்பிக்கை துரோகம் இவை எல்லாம் யாரால் அரசியலில் அரங்கேற்றப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். அதற்குப் பின்னால் வந்த 11 தேர்தல்களிலும். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றாலும் சரி. சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி அனைத்து தேர்தல்களிலும் கழகம் தோல்வியைத் தான் சந்தித்தது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒற்றை தலைமை தான் வேண்டுமென்று அடம் பிடித்து அதை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
வசந்த காலமாக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை, இன்றைக்கு மாற்றி இருக்கிறவர்கள் யார் என்று உங்களுக்கே நன்றாகவே தெரியும். அவர்களுடைய பெயர்களை எல்லாம் நான் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். எங்கள் வாய் நல்ல வாய். அவர்கள் வாய் என்னவாய் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். தமிழக மக்கள் விரும்புவது இரு மொழி கொள்கை தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார் இரு கொள்கை தான் என்று. அதை போலவே அம்மா அவர்களும் சட்டமன்றத்தில் இரு மொழி கொள்கை தான் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். நானும் முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் நீண்ட விளக்கத்தை தந்து எங்களுடைய நிலைப்பாடும் இரு மொழி கொள்கை தான் என்று தெரிவித்துள்ளேன்.
மாநில நிதியாக இருந்தாலும் சரி, மத்திய நிதியாக இருந்தாலும் சரி அது மக்களுடைய வரிப் பணம். அதிமுக இயக்கம் என்பது தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பது தான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதற்காக தான் நாங்களும் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். நமது தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை நமது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று கூறினார்.