பொய்த தகவல் பரப்பிய நாயுடுவின் பாவம் தீர பூஜை பண்ணுங்க.. ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

Aadmika
Sep 26, 2024,01:12 PM IST

விஜயவாடா :   புனிதமான திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக பொய்யான தகவலை பரப்பிய சந்திரபாபு நாயுடுவின் பாவம் தீர மக்கள் அனைவரும் கோவில்களில் பூஜை செய்ய வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.


திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இது முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நடந்ததாக அவர் தெரிவித்தார். இதில் உண்மையில்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்காக இப்படி ஒரு பொய் தகவலை சந்திரபாபு நாயுடு பரப்புவதாக ஜெகன் மோகன் மறுப்பு தெரிவித்தார். ஆனால் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மை தான் இது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானமே விளக்கம் அளித்தது.




இதனையடுத்து நாடு முழுவதும் இது சர்ச்சையானதை அடுத்து திருப்பதியில் செப்டம்பர் 23ம் தேதியன்று கோவிலில் 4 மணி நேரம் சிறப்பு ஹோமம், பூஜைகள் நடத்தி, புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனால் திருப்பதி ஏழுமலையான் பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டதாகவும், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட பாவம், தோஷம் நீங்க மக்கள் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடும் படியும், நாராயண மந்திரத்தை சொல்லும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


அது மட்டுமல்ல லட்டு சர்ச்சைக்கு பிறகு லட்டு பிரசாத விற்பனை பாதிக்கப்படவில்லை. மாறாக லட்டு விற்பனை வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாகவும், கடந்த 4 நாட்களில் 14 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகி உள்ளதாகவும், புரட்டாசி மாதம் பிறந்த பிறகு கடந்த 10 நாட்களில் மட்டும் திருப்பதியில் 36 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி உள்ளதாக திருப்பதி கோவில் நிர்வாகம் கூறி இருந்தது. 


இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், புனிதமான லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக பொய்யான, தவறான தகவலை பரப்பி சந்திரபாபு நாயுடு பாவம் செய்து விட்டார். இந்த பாவம் தீரவும், திருமலையின் புனிதத்தை மீண்டும் மீட்கவும் மக்கள் அனைவரும் செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று பூஜை செய்து வழிபடும் படி கேட்டுக் கொண்டுள்ளார். அது மட்டுமின்றி, தன்னுடைய நேர்மையை நிரூபிக்க ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோவிலுக்கு செல்ல தயாரா என பாஜக விட்ட சவாலை ஏற்கும் வகையில் செப்டம்பர் 28ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.


இது ஒரு புறம் இருக்க, ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் ஏற்கனவே திருப்பதி பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த பாவத்தை போக்குவதற்காக 11 நாள் விரதத்தை துவக்கி உள்ளார். இவர் திருப்பதி கோவிலில் அலிபெரி நடைபாதை வழியாக செல்லும் படிகளை சுத்தம் செய்து, பூஜை செய்தார். இதனால் திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்