அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் என டெல்லி பயணம்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று திடீர் என டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் சட்டசபை வந்த செங்கோட்டையன், அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்ளாமலும், அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசாமல், சபாநாயகரை மட்டும் தனியாக சந்தித்து பேசிவிட்டு சென்றார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்று கேட்டதற்கு, நீங்கள் இதை அவரிடம் போய் கேளுங்கள் என்று கோபமாக எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்திருந்தார். இது மேலும் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே பிரச்சனை இருப்பது உறுதியானது.
இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் என எந்த அறிவிப்பும் இன்றி டெல்லி பயணம் மேற்கொண்டார். எதற்காக என்று கேட்டதற்கு டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக கட்சி அலுவலகத்தை பார்ப்பதற்காக தான் வந்தேன். யாரையும் சந்திக்க வரவில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து அன்றே 3 கார்களில் மாறிச்சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் சில அதிமுக முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இந்நிலையில், அதிமுக-பாஜகவினரிடையே மீண்டும் கூட்டணி ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது மேலும் அக்கட்சி வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லியில் தான் தற்போது முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.