தமிழ்நாட்டில்.. வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை.. மலையேற்ற சுற்றுலாவுக்கு தடை.. வனத்துறை அறிவிப்பு..!

Manjula Devi
Feb 19, 2025,06:26 PM IST

சென்னை: இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.


தற்போதுள்ள காலகட்டத்தில்  உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு ரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் ரீதியான பிரச்சனைகளில் ஈடுபட்டு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மருத்துவர்களின் பரிந்துரைப்படி கண்களுக்கு விருந்தளித்து, மன அமைதிக்கு வழிவகை செய்யும் இயற்கை எழில் கொஞ்சும் 

மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.இதனால் சுற்றுலாப் பயணிகள் கடந்த சில வருடங்களாகவே அமைதி, இயற்கை எழில், சுற்றுச்சூழல், இயற்கையான காற்று போன்ற காரணங்களால் மலைவாச ஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். இதனால் ட்ரக்கிங் என சொல்லப்படும் மலையேற்றம் உடலில் மூச்சு தன்மையை சீர் செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மன அமைதியை கொடுக்கிறது.




 உடலில் கலோரிகளை குறைக்க உதவுகிறது. இப்படி பலவகை நன்மைகள் அடங்கி இருப்பதால் மலையேற்றத்தை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வருகின்றனர். அதே சமயத்தில் சீசன் காலகட்டத்தில் சீதோசனநிலையை அனுபவிக்கவும் விருப்பம் காட்டி வருகின்றனர்.


இதனை கருத்தில் கொண்டு எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், மக்கள் பாதுகாப்புடன் எந்தெந்த பகுதிகளில் ட்ரக்கிங் செல்லலாம் என்பதை தீர்மானித்து தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றம்  செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.


அதன்படி, கடந்த ஆண்டு முதல் திருப்பூர், நீலகிரி, கோவை, சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், நத்தம், உள்ளிட்ட 40 இடங்களில் மலையேற்றம் செய்யும் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு www.trektamilnadu.com என்ற இணையதளம் வாயிலாக  பதிவு செய்து டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு, நிலை தன்மையை உறுதி செய்தல், காட்டுத்தீ போன்ற அபாயங்களை தவிர்க்க இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.