கிர்கிஸ்தானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.. இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Su.tha Arivalagan
May 18, 2024,10:34 AM IST

டெல்லி:  கிர்கிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு மாணவர்கள் மீது திடீரென ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மாணவர்கள் தங்களது இருப்பிடங்களிலேயே இருக்குமாறும், வெளியில் வர வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இந்திய மாணவர்கள் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் எக்ஸ் தளம் மூலமாக அறிவுறுத்தியுள்ளார்.


முன்னதாக கும்பல் ஒன்று விடுதி ஒன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் நாட்டு மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்தத் தாக்குதலில் சில பாகிஸ்தான் மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு வரவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.




மே 13ம் தேதியன்று கிர்கிஸ்தானைச் சேர்ந்த மாணவர்களுக்கும், எகிப்து நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே திடீரென சண்டை மூண்டது. இதுதான் கலவரத்திற்குக் காரணம். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் விடுதிக்குள் புகுந்து கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


தலைநகர் பிஷக்கில் உள்ள பல்வேறு மருத்துவ பல்கலைக்கழகங்களின் விடுதிகளைக் குறி வைத்து கும்பல்கள் தாக்குதலில் இறங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாத, பாகிஸ்தான், வங்கதேச மாணவர்களை அவர்கள் குறி வைத்து தாக்கி வருவதாக கூறப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷரீப் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடந்திருப்பது வருத்தம் தருவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 


மத்திய அரசு அறிவுறுத்தல்


இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய மாணவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருக்கிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். 0555710041 என்ற எண்ணை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.