மாட்டு வண்டி கட்டிக்கிட்டு.. ஹாயாக.. ஓட்டி சென்ற .. அமைச்சர்!

Su.tha Arivalagan
Sep 22, 2023,02:54 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது தோட்டத்திற்கு தானாக மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற வீடியோவை ட்விட்டரில்  பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


உணவுத்துறை அமைச்சரான சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளி மந்தயம் என்ற கிராமத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 


கடந்த மே 7அன்று முதல் முறையாக அமைச்சரானார். உணவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.  சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது அவ்வப்போது தனது தோட்டத்திற்கு சென்று தனது நேரத்தை செலவிட்டு வந்தார். உணவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் அடிக்கடி கிராமத்துக்கு வர முடியாத நிலை.


இந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நேற்று சென்றார். தானே மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு சிறிது நேரம் ஓட்டி மகிழ்ந்தார். படு காஷுவலாக ஜாலியாக அவர் மாட்டு வண்டியை ஓட்டி வந்ததே சூப்பராக இருந்தது.  ஜல் ஜல் என்று மணிகள் ஒலிக்க மாடுகளும் குஷியாக ஓடிச் சென்றன.


தொலைபேசி மணியின் சத்தம் கேட்கும் வரை கடந்த காலத்தின் மகிழ்வான பல நினைவுகளுடன் சிறிது நேரம் திளைத்து இருந்தேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அமைச்சராக இருப்பினும் அவரின் எளிமையும், உள்ளுணர்வும் வரவேற்பதாக உள்ளது.


என்னதான் சொல்லுங்க.. சொந்த ஊர் மண்ணும், கிராமத்து சூழலும், அந்த மகரந்த காற்றும்.. மாசில்லாத மக்களின் எளிமையான பேச்சும்.. அதாங்க சொர்க்கம்!