சென்னையில் நாளை உணவுத் திருவிழா.. கரூர் தோல் ரொட்டி.. மதுரை கறி தோசை.. சிவகங்கை மட்டன் உப்புக்கறி!
சென்னை: சென்னையில் நாளை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுதிருவிழா தொடங்க உள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் விதம் விதமான உணவுகள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களின் உணவு திருவிழா நாளை தொடங்கி, வருகிற 24-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உணவு திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டும் இன்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த உணவுகள் இதில் இடம் பெறவுள்ளன.
மொறுமொறுப்பான உணவுகள்: கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி-மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி - அவரைக் குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சை பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகை மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள், 65 சுய உதவி குழுக்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
24 குழுக்கள்.. 67 வகை உணவுப் பொருட்கள்: உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற 67 வகையான தயார் நிலை உணவு பொருட்களை, உணவு தரச் சான்றிதழ் பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படமின்றி தயாரித்து தகுந்த முறையில் விற்பனை செய்ய ஆறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கைவினைப் பொருள் விற்பனை: மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் உணவு திருவிழா, 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மதியம் 12:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வாகன நிறுத்தமும் ரெடி: உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமான வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைக்கு மெரீனா பீச் பக்கம் போனீங்கன்னா.. இன்னிக்கு ஒரு புடி.. அப்படின்னு பிடிச்சுட்டு வாங்கப்பா!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்