இரவில் வெளுத்த கனமழை.. சற்றே ஸ்தம்பித்த சென்னையில் விமான சேவை

Su.tha Arivalagan
Sep 08, 2023,11:08 AM IST
சென்னை: சென்னையில் நேற்று இரவு திடீரென பெய்த கன மழையால் விமான சேவை சற்று பாதிக்கப்பட்டது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 8  ஆம் தேதியிலிருந்து  10ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.



தாம்பரம், கிண்டி, மீனம்பாக்கம், தி.நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இரவில் வெளுத்த கன மழையால் நகரின் இயல்பு வாழ்க்கை சற்றே பாதித்தது. கனமழை எதிரொலியால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவில் வீடு திரும்பியோர் கடும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னையில் கன மழை மற்றும் மோசமான வானிலையின் காரணமாக விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள்  விமானம் தரையிறக்க முடியாமல் திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சென்னையில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்ததும் தான் நிலைமை சற்று சகஜ நிலைக்குத் திரும்பியது.