Flashback 2023: இனி இவர்கள்தான்.. ஒரே ஆண்டில் புது பொதுச் செயலாளர்களைப் பெற்ற.. இரு பெரும் கட்சிகள்!

Su.tha Arivalagan
Dec 14, 2023,06:58 PM IST

சென்னை: 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளுக்குப் புதிய பொதுச் செயலாளர்கள் கிடைத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். இப்போது தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


2023ம் ஆண்டில், தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் நிகழ்வுகளாக இது பார்க்கப்படுகிறது. அதிமுக ஜெயலலிதாவுக்குப் பிறகு என்னாகும் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் தலை தூக்கியிருந்த நிலையில் மெல்ல மெல்ல அந்தக் கட்சி "பாதுகாக்கப்பட்டது". காரணம், அதிமுக பல துண்டுகளாக சிதைந்து போய் விட்டால், அது திமுகவுக்கு மிகப் பெரிய சாதகமாகிப் போய் விடும் என்ற "அச்சம்"தான்.




ஆனால் சிலரின் வசதிக்காக அதே அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கவும் பட்டது. முதலில் சசிகலா சிறைக்குப் போனார்.. பின்னர் டிடிவி தினகரன் நீக்கப்பட்டார். அடுத்து ஓபிஎஸ் உள்ளே வந்தார்.. பின்னர் அவரும் நீக்கப்பட்டார்.. அதன் பிறகு தொடங்கியது இரட்டை இலைக்காகவும், அண்ணாவின் விரல் சுட்டும் அதிமுகவின் கொடிக்கும் உரிமையாளர் யார் என்ற உரிமைப் போர்.


தமிழ்நாட்டு அரசியலில் இப்படி ஒரு சட்டப் போராட்டத்தை பார்த்து மக்களுக்கு ரொம்ப காலமாகி விட்டது என்பதால் இந்த அதிமுக உட்கட்சி சட்டப் போராட்டம் படு சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப் போரில் கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த மார்ச் மாதம் முறைப்படியும், சட்டப்படியும் பொறுப்பேற்றுக் கொண்டார்.


அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அதிலிருந்து நீக்கிய பிறகுதான் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தார்.


பிரேமலதா விஜயகாந்த்தின் சகாப்தம்




இந்த நிலையில் இப்போது தேமுதிகவிலும் கிட்டத்தட்ட அதே கதைதான் நடந்துள்ளது. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டுள்ளார் விஜயகாந்த். அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதன் காரணமாக கட்சி செயல்பாடுகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன் விஜய பிரபாகரன் ஆகியோர்தான் பார்த்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்திலும் கூட இவர்கள்தான் ஈடுபட்டார்கள். முக்கிய நிகழ்ச்சிகளிலும் இவர்கள்தான் பங்கேற்று வருகிறார்கள். அறிக்கைகள் மட்டும் விஜயகாந்த் பெயரில் வரும். விஜயகாந்த் அவ்வப்போது கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுவார்.


இந்தப் பின்னணியில் இப்போது கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை விஜயகாந்த்திடமிருந்து, பிரேமலதா விஜயகாந்த்துக்கு மாற்றியுள்ளது தேமுதிக பொதுக் குழு. இன்று முதல் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். இதுவரை அவர் பொருளாளர் பொறுப்பில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேமுதிகவின் நிறுவனரான விஜயகாந்த் கட்சியின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். அவரது காலத்தில் அதிகபட்சம் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிகவை உயர்த்திக் காட்டினா். இப்போது பிரேமலதா விஜயகாந்த் காலத்தில் தேமுதிக என்ன மாதிரியான உயர்வை அடையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Flashback 2023: "மணமாலையும் மஞ்சளும் சூடி".. ரெடின் கிங்ஸ்லி முதல்.. கோலி சோடா கிஷோர் வரை!