Flashback 2023: இந்தியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில்.. இந்த வருடம் டாப் 10 இவர்கள்தான்!

Su.tha Arivalagan
Dec 16, 2023,05:06 PM IST

- மஞ்சுளா தேவி


டெல்லி: 2023ம் ஆண்டின் மிகப் பெரிய இந்தியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிதான் டாப்பில் இருந்துள்ளார். இந்தப் பட்டியலில் ஒரு தமிழரும் இடம் பெற்றுள்ளார்.


2023 விடை பெற்று செல்ல ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நாட்கள்தான். புதிய வருடம் பிறக்கப் போகிறது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு இந்திய தொழில்துறையில் யாரெல்லாம் டாப்பில் இருந்தார்கள் என்று பார்க்கலாம்.


ஈட்டிய நிகர மதிப்பின் அடிப்படையில், 2023ம் ஆண்டு இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களாக இவர்கள்தான் உருவெடுத்துள்ளனர். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி.


முகேஷ் அம்பானி: முகேஷ் அம்பானிக்கு வயது 66. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன் நிர்வாக இயக்குனரும், தலைவரும் ஆவார். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 8.08 லட்சம் கோடியாகும். 




கௌதம் அதானி:  61 வயதாகும் கெளதம் அதானி, அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். இவர் இந்திய பணக்கார வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.72 லட்சம் கோடி ஆகும்.


சைரஸ் பூனவல்லா: இவருக்கு வயது 82.  இவரது நிறுவனம்தான் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா. தடுப்பூசி உருவாக்கத்தில் முன்னோடி. இவருடைய  சொத்து மதிப்பு 2.78 லட்சம் கோடி.  இந்திய  பணக்காரர்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.


ஷிவ் நாடார்:  HCL குழுமத்தின் நிறுவனர். தகவல் தொழில்நுட்பத் துரையில் ஆற்றிய பங்களிப்பிற்கு இந்திய அரசாங்கத்தால் 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மதிப்பிற்குரிய மூன்றாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷன் விருதை பெற்றவர். வருடா வருடம் பல கோடிகளை நன்கொடையாக வழங்கி வருபவர். இந்திய பணக்கார வரிசையில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 2.28 லட்சம் கோடி ரூபாய் 

ஆகும்.




கோபிசந்த் ஹிந்துஜா:  சகோதரர் ஸ்ரீசந்த் பி ஹிந்துஜாவின் மறைவுக்குப் பிறகு ஹிந்துஜா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றவர். வாகனம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, உள்கட்டமைப்பு, எண்ணெய் போன்றவற்றில் உலகளாவிய வணிக சாம்ராஜ்யத்தை வைத்திருப்பவர். இந்திய பணக்கார தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.76 லட்சம் கோடி.


திலீப் ஷாங்வி:  சன் பார்மா சூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர்.  இவர் இந்திய பணக்காரர்களுள் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.64 லட்சம் கோடி ஆகும்.


லட்சுமி மிட்டல்:  73 வயதான லட்சுமி மிட்டல், ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் ஆவார். 2021 ஆம் ஆண்டு தனது மகன் ஆதித்யா மிட்டலுக்கு  தலைமை செயல் அதிகாரி பொறுப்பை வழங்கினார். இவர் இந்திய பணக்காரர்களில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1.62 லட்சம் கோடி ஆகும்.




ராதாகிஷன் தமானி: அவன்யூ சூப்பர் மார்க்கெட் லிமிடெட் நிறுவனர்.  இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட டி மார்ட் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறார். இவர் இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1.43  லட்சம் கோடி ஆகும்.


குமார் மங்கலம் பிர்லா:  ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1.25 லட்சம் கோடி ஆகும்.


நீரஜ் பஜாஜ்: பஜாஜ் குழுமத்தின் தலைவர். பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகனம் தயாரிப்பில் முன்னோடி ஆகும். இவர் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.20 லட்சம் கோடி ஆகும்.


இந்த வருடம் இவர்கள் டாப்பில் இருந்துள்ளனர். 2024ல் கோலோச்சப் போவது யார்.. பொறுத்திருந்து பார்ப்போம்.