Flashback 2023: இந்த வருடத்தில்.. இந்தியர்களோட சாப்பாட்டு காம்பினேஷைப் பார்த்தீங்களா மக்களே..!

Su.tha Arivalagan
Dec 16, 2023,05:07 PM IST

சென்னை: 2023ம் ஆண்டில் அதிக அளவில் உண்ணப்பட்ட உணவு எதுன்னா.. சத்தியமா இட்லி, தோசை இல்லீங்க.. வழக்கம்போல மணமணக்கும் பிரியாணிதான்!.. அதேபோல கேக்குகளையும் மக்கள் வளச்சு வளச்சு ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்காங்க.


2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் உண்ணப்பட்ட அல்லது ஆர்டர் செய்யப்பட்ட உணவு என்ற பெயரை மீண்டும் பிரியாணி தட்டி சென்றுள்ளது. அதேபோல் இந்தியாவிலேயே அதிக அளவாக பெங்களூரில் கேக் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்தாண்டு பிறக்கப் போகிறது. கடந்து சென்ற ஆண்டில் என்னவெல்லாம் மக்கள் அதிகம் சாப்பிட்டார்கள், எதெல்லாம் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டது என்ற விவரத்தை வருடா வருடம் ஸ்விக்கி நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் 2023ம் ஆண்டில் எது அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது, எது அதிகம் சாப்பிடப்பட்டது, எந்த ஊரில் அதிக ஆர்டர்கள் வந்தன என்ற விவரத்தை அது வெளியிட்டுள்ளது.




அதன்படி,  வழக்கம்போல இந்த ஆண்டும் பிரியாணிதான் அதிக அளவில் சாப்பிடப்பட்டுள்ளதாம். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியின்போதுதான் நம்ம ஆட்கள் வச்சு வெளுத்திருக்கிறார்கள்.


இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது ஒரு நிமிடத்திற்கு 50 பிளேட் பிரியாணி என்ற விகிதத்தில் இந்தியர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சண்டிகரில் உள்ள ஒரு குடும்பம் ஒரே நாளில் 70 பிளேட் பிரியாணிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளது. உலக கோப்பை இந்திய பாகிஸ்தான் போட்டியின் போது மட்டும் ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக swiggy தெரிவிக்கிறது.


எங்கெங்கும் பிரியாணி:




பிரியாணி குறித்து ஏகப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது ஸ்விக்கி. அந்த அளவுக்கு பிரியாணிக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது.


விநாடிக்கு சராசரியாக 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில் டாப் சிக்கன் பிரியாணிதான். விநாடிக்கு 5.5 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், வெஜ் பிரியாணிக்கும் நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.


முதல் முறை பிரியாணி ஆர்டர் செய்தோர் எண்ணிக்கை 24  லட்சம் என்பது மிரள வைக்கிறது. அதாவது பிரியாணியிலிருந்து அவர்கள் ஸ்விக்கியின் சேவையைத் தொடங்கியுள்ளனர். ஸ்விக்கி பிரியாணி குறித்து கூகுளில் 40 லட்சத்து 30 ஆயிரத்து 827 முறை தேடியுள்ளனராம். 


ஹைதராபாத்தில் ஒருவர் 1633 பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.  கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு சராசரியாக 4 பிரியாணி அவர் வாங்கியுள்ளார். 


கேக்குகளை வாரிக் குவித்த பெங்களூரு:




அதேபோல கேக்குகளும் அதிக அளவில் சாப்பிடப்பட்டுள்ளன. பெங்களூரில் 8.5 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 80 லட்சம் கேக்குகள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனைவருக்கும் மிகவும் பிடித்த சாக்லேட் கேக்குகள்தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அதாவது காதலர் தினத்தன்று அதிகளவில் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.


நாக்பூரைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அனேகமாக அவர் காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து வேளையிலும் கேக் மட்டுமே  சாப்பிடிருப்பார் போல. 


ரூ. 6 லட்சத்துக்கு இட்லி:





தென்னிந்தியர்களின் பேவரைட் உணவான இட்லியை அதிகம் வாங்கிய நபர் என்ற பெருமை..ம்ஹூம்.. அவர் சென்னைக்காரர் கிடையாது.. ஹைதராபாத் வாடிக்கையாளருக்குக் கிடைத்துள்ளது. அவர் ரூ. 6 லட்சத்துக்கு இட்லி  வாங்கி அசத்தியுள்ளார்.


அதேபோல மசாலா தோசையும் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட வெஜிட்டேரியன் உணவு வரிசையில் இடம் பிடித்துள்ளது. கொரிய உணவுகளுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி இருக்கும். இந்த முறை ஜப்பானிய உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


அதிக ஆர்டர்களில் சென்னை டாப்




பல்வேறு உணவு வகைகளை அதிக அளவில் ஆர்டர் செய்த நகரங்களாக, சென்னை, டெல்லி, ஹைதராபாத் ஆகியவை டாப்பில் உள்ளன.  இது ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான கணக்கு ஆகும்.


மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், இந்த ஆண்டு ரூ. 42.3 லட்சம் அளவிலான உணவுகளை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்துள்ளார். இவர்தான் தனி நபராக அதிகபட்ச தொகைக்கு ஆர்டர் செய்தவர். 

மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரபலமான, துர்கா பூஜையின் போது குளோப்ஜாமுன்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ரசகுல்லாக்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்படும். ஆனால் இந்த முறை குளோப்ஜாமுன் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதாவது 70 லட்சம் குளோப்ஜாமுன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.


பீட்சா வெறியர்:





அதேபோல ஒரு கஸ்டமர் ஒரே நாளில் 207 பீட்ஸாக்களை ஆர்டர் செய்துள்ளார். புவனேஸ்வரைச் சேர்ந்த வாடிக்கையாளர் அவர். அது பார்ட்டிக்காக கொடுக்கப்பட்ட ஆர்டராம்.


தனி நபர் பார்ட்டி ஆர்டர் அதிக அளவில் கொடுத்த நகரம் என்ற பெருமை ஜான்சிக்குப் போயுள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு கஸ்டமர், 269 உணவு வகைகளை ஆர்டர் கொடுத்துள்ளார்.


காபி குடிப்பதில் சென்னைக்காரர் சாதனை:




சென்னையைச் சேர்ந்த ஒருவர் காபி, ஜூஸ், குக்கிஸ், நாச்சோஸ் சிப்ஸ் வாங்குவதற்காக ஒரே நாளில் ரூ. 31,748க்கு ஆர்டர் கொடுத்து அசத்தியுள்ளார். எல்லாத்தையும் அவரே சாப்பிட்டாரான்னு தெரியலை. பக்கத்தில் கொடுத்து சாப்பிட்டிருப்பார் என்று நம்புவோம்!


பெங்களூரில்  இந்த ஆண்டு அதிக அளவில் ஸ்விக்கி மூலம் மாம்பழம் வாங்கியுள்ளனர். அடுத்த இடத்தில் மும்பையும், ஹைதராபாத்தும் உள்ளன.


ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் அதிகம் வாங்கப்பட்டது பால்தான். அடுத்து தயிர், வெங்காயம் வாங்கியுள்ளனர். 


சென்னை வெங்கடேசன், கொச்சி சாந்தினி ஆகிய இருவரும் இந்த ஆண்டு அதிக டெலிவரி கொடுத்து அசத்தியுள்ளனர். வெங்கடேசன், 10,360 ஆர்டர்களையும், சாந்தினி 6253 ஆர்டர்களையும் டெலிவரி கொடுத்து அசத்தியுள்ளனர்.