Flashback 2023: ஹமாஸ் அட்டாக்.. உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்து.. அதிர வைத்த திரில் சம்பவங்கள்..!
டெல்லி: 2023ம் ஆண்டு பல பரபரப்பான, பதைபதைப்பான சம்பவங்களையும் கண்டது. அதிர வைத்த பல சம்பவங்களுடன் விடை பெறும் 2023ம் ஆண்டை திரும்பிப் பார்ப்போம்.
யார் சொல்லையும் கேட்பதில்லை.. யாருக்கும் பயப்படுவதும் இல்லை.. யாரிடமும் போய் கெஞ்சுவதும் இல்லை.. அடித்தால் திரும்பக் கிடைப்பது மரண அடிதான்.. அடிக்க நினைத்தாலே அழித்து விடுவது.. இதுதான் இஸ்ரேலின் அடையாளம்.. ஆனால் இந்த அடையாளத்தை ஒரே நாளில் காலி செய்து அதிர வைத்து விட்டது ஹமாஸ்.
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பின் ஆயுதம் தாங்கிய இளைஞர் பட்டாளம், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்தது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிய அவர்கள் கையில் கிடைத்தவர்களையெல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு பிணைக் கைதிகளாக தங்களது பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.
இவர்கள் இப்படி அதிரடி காட்டுவதற்கு வசதியாக வான்வெளித் தாக்குதலை ஹமாஸ் மேற்கொண்டது. அதுதான் உலகை அதிர வைத்தது. சரமாரியாக ஆயிரக்கணக்கான ராக்கெட்களை இஸ்ரேலுக்குள் ஏவித் தாக்கியது ஹமாஸ். நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று இறுமாப்புடன் இருந்த இஸ்ரேல் அப்படியே நிலை குலைந்து போனது.
என்ன நடந்தது என்பதை ஊகித்து சுதாரிப்பதற்குள் இஸ்ரேலுக்கு ஏகப்பட்ட சேதத்தைக் கொடுத்து விட்டது ஹமாஸ். அதன் பின்னர் நடந்தது இஸ்ரேல் ராணுவத்தின் ரத்த வெறியாட்டம்.. இன்று வரை முடிவில்லாமல் அது நீண்டு கொண்டிருக்கிறது.. இஸ்ரேல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற அந்தக் கட்டமைப்பை தகர்த்ததுதான் ஹமாஸ் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம்.. அதற்காக அது கொடுத்த விலை மிகப் பெரியதுதான்.. ஆனாலும் இஸ்ரேலையை அதிர்ச்சி அடைய வைத்த இந்த சம்பவம் பாலஸ்தீன வரலாற்றில் முக்கியப் புள்ளியாக அமைந்து விட்டது என்னவோ உண்மை.
ஒடிஷா ரயில் விபத்து
இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து என்ற சோகமான பெயரைப் பெற்ற ஒடிஷா ரயில் விபத்து ஜூன் 2ம் தேதி நடந்தது. பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரை உயிரிழந்தனர்.
பஹங்கா பஜார் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முழு வேகத்தில் லூப் லைனில் நுழைந்து விட்டது. அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் 3 பெட்டிகள், அருகாமையில் வந்து கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மோதி அந்த ரயிலும் விபத்தில் சிக்கிக் கொண்டது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த கோர விபத்தால் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 1995ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்து இதுதான்.
ஆதிக் அகமது படுகொலை
உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆதிக் அகமது படுகொலை நாட்டையே அதிர வைத்தது. ஒரு காலத்தில் கேங்ஸ்டராக வலம் வந்து கொலை, ரவுடித்தனம், கட்டப் பஞ்சாயத்து என்று அதிர வைத்த நபர்தான் ஆதிக் அகமது. வழக்கமாக ரவுடிகள் எல்லாம் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவது போல இவரும் அரசியல் பக்கம் திரும்பினார் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். எம்.பியாகவும், சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் மீது கிட்டத்தட்ட 160 வழக்குகள் நிலுவையில் இருந்தன. பல காலமாக சிறையிலையே அடைபட்டுக் கிடந்தது. அங்கிருந்தபடியே தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றவர். ஏப்ரல் 15ம் தேதி அவரை மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸார் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் போர்வையில் இருந்த 3 பேர் திடீரென ஆதிக் அகமதுவை சுட்டுக் கொன்றனர். அவரது சகோதரரும் உடன் கொல்லப்பட்டார்.
நேரடி ஒளிபரப்பு பேட்டியின்போது நடந்த இந்த பட்டப் பகல் படுகொலை நாட்டையே அதிர வைத்து விட்டது.