Flashback 2023: ஆளுநருடன் மோதல்.. சிக்கல் அமைச்சர்கள்.. சவால் "வெள்ளத்தால்" சூழப்பட்ட திமுக!

Meenakshi
Dec 22, 2023,05:17 PM IST

சென்னை: 2023ம் ஆண்டு திமுகவுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது.


ஆளுநர் ஆர். என். ரவியுடனான மோதல் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த ஆண்டு அது உச்சத்தை எட்டியது.. அடுத்தடுத்து 2 அமைச்சர்களுக்குப் பெரும் சிக்கல் எழுந்தது.. ஆண்டின் கடைசி மாதத்தில் வடக்கிலும், தென்கோடி தமிழ்நாட்டிலும் இரு பெரும் வெள்ளம் வந்து பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டு அரசை அழுத்தி விட்டுப் போயுள்ளது.


தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என். ரவி வந்தது முதலே அவருக்கும் திமுக அரசுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு அரசின் பல்வேறு முடிவுகளுக்கு ஆளுநர் ஆட்சேபனை தாமதம் அல்லது கிடப்பில் போடுவது என்ற முடிவை கையில் எடுத்ததால் பிரச்சினை முற்றியது.


ஆளுநர் - திமுக அரசு மோதல்




தமிழக சட்டசபையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த முதல் கூட்டத் தொடரின்போது இடம் பெற்ற ஆளுநர் உரையில் இடம் பெற்ற அனைத்தையும் படிக்காமல் சிலவற்றை மாற்றியும், சிலவற்றை விட்டு விட்டும் ஆளுநர் படித்ததால் பிரச்சினையானது. அதுகுறித்து ஆளுநர் அவையில் இருந்தபோதே அதற்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் தீர்மானம் வாசிக்க, வெகுண்ட ஆளுநர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அதுவரை தமிழ்நாடு சட்டசபையில் நடந்திராத சம்பவம் அது.


அதன் பின்னர் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் வெடித்தது. ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. இந்த வழக்கைத் தொடர்ந்து அதிரடியாக மசோதாக்களை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர். இந்த சட்ட சிக்கல் இந்த ஆண்டின் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது.


அமைச்சர்களால் வந்த சிக்கல்




இந்தப் பிரச்சினைகள் தலைவலி என்றால், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ரூபத்தில் திருகுவலியைச் சந்தித்தது திமுக அரசு.


அதிமுக  ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது,  ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக செந்தில்  பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு, செந்தில் பாலாஜி திமுகவுக்கு மாறி, திமுக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யும் போதே செந்தில்பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்  உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய நாளங்களில் அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 3 முறையும்  ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. சுப்ரீம் கோட்டை அணுகி உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு கேட்டார் அங்கேயும் ஜாமீன் கிடைக்கவில்லை. தற்பொழுது சிறை காவலில் உள்ளார். இவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். இவரை ஆளுநர் ஆர். என். ரவி அதிரடியாக டிஸ்மிஸ் செய்து, அது பெரும் சட்ட சிக்கலை ஏற்படுத்தியதால் அந்த முடிவை திரும்பப் பெற்றார் ஆளுநர்.


பொன்முடி விவகாரம்




இவர் இப்படி இருக்க, இவருக்கு ஜோடியாக மற்றொருவரும் சிக்கியுள்ளார். அவர் தான் பொன்முடி.  தி.மு.க., ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சி மீதும் வழக்கு தொடரப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டது  ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம்  நீதிமன்றம் 2016ல்  இருவரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து, 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதால் அமைச்சர் எம்எல்ஏ பதவிகளை இழந்தார் பொன்முடி. இந்த விவகாரம் திமுக அரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.


டிசம்பர் வெள்ளம்




இப்படி ஆண்டு முழுவதும் சிக்கல்கள் நீடித்த நிலையில் டிசம்பர் மாதத்தில் இரு பெரும் பேரிடியாக வட மாவட்டங்கள் மற்றும் தென் கோடி மாவட்டங்களில் பேய் மழை பெரு வெள்ளம் வந்து அரசுக்கு பெரும் பளுவை ஏற்படுத்தி விட்டது.


டிசம்பர் 3ம் தேதி மிச்சாங் புயல் காரணமாக வட தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. மிகப் பெரிய விமர்சனத்துக்கும் திமுக அரசு ஆளானது. ஆனாலும் புயல் வேகத்தில் நடந்த நிவாரணப் பணிகளால் வெள்ள நீர் வேகமாக வடிந்து, திமுக அரசும் தப்பியது.


இந்த வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு அக்கடா என்று உட்கார நினைத்தபோது தென் மாவட்டங்களில் டிசம்பர் மத்தியில் வந்து சேர்ந்தது இன்னொரு பேய் மழையும், பெரு வெள்ளமும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை உண்டு இல்லை என்று செய்து விட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தூத்துக்குடியும், நெல்லையும்தான். 


இப்படி ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை விடாமல் துரத்தி வந்த சவால்களை சந்தித்தும், சங்கடங்களைக் கடந்தும் 2024ம் ஆண்டில் நுழையவிருக்கிறது திமுக அரசு.