Flashback 2023: மாரிமுத்து முதல் சரத் பாபு வரை.. கலை மணம் பரப்பி.. வின்னுலகம் சென்ற ஸ்டார்ஸ்!
- மஞ்சுளா தேவி
சென்னை: 2023ம் ஆண்டின் மிகவும் அதிர்ச்சிகரமான மரணம் என்றால் அது நடிகர் மாரிமுத்துவின் திடீர் மறைவுதான். யாருமே எதிர்பார்க்கவில்லை இவரது மரணத்தை.. அதேபோல சரத் பாபு, மனோ பாலா என மக்கள் மனம் கவர்ந்த பலரும் இந்த ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தனர்.
மரணம் என்பது நம் கையில் இல்லை. நாம எப்ப இருப்போம்.. எப்ப இறப்போம் .. என்பது யாருக்கும் தெரியாது.. ஆனால் போற நேரத்துல கரெக்டா போயிருவோம். இது நம்மை படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால் இயற்கையை நம்மால் மாற்ற முடியாது. எதையும் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும். இந்த வருடம் பல்வேறு திரை பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம்.
மனோபாலா: இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், நகைச்சுவையாளர் என பன்முகம் திறமை கொண்டவர். இவர் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் திடீரென இவரது மரணச் செய்தி வந்து சேர்ந்தது. 69 வயதில் காலமானார் மனோபாலா.
நடிகை ஜமுனா: இயக்குனராகவும், அரசியல்வாதியாகவும், திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் .1955ம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் தனது 86 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜனவரி 27 அன்று காலமானார்.
இ. ராமதாஸ்: ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் இ. ராமதாஸ். எழுத்தாளராக பணியாற்றி வந்த இவர் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார். உடல் நலக் குறைவால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஜனவரி 23ஆம் தேதி காலமானார்.
மாரிமுத்து: இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர் மாரிமுத்து. பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானவர். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து ஆதி குணசேகரன் ஆகவே அவதாரம் எடுத்தவர். இதில் இவர் பேசும் இந்தாமா ஏய் என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்டது. பிரபலமாகும் வேளையில் தனது 57 வது வயதில் செப்டம்பர் 8ஆம் தேதி சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய இறப்பு செய்தி கேட்டு திரை உலகமே அதிர்ச்சி அடைந்தது.
ஆர். எஸ். சிவாஜி: நகைச்சுவை நடிகராகவும், குணசேத்திர வேடங்களிலும் நடித்தவர். அபூர்வ சகோதரர்கள் படத்தில் சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்ற டயலாக் மூலம் பிரபலமானவர். 90களில் பல படங்களில் நடித்தவர் .இவர் சந்தான பாரதியின் சகோதரர் ஆவார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானவர்.
கே. விஸ்வநாத்: 1965 ஆம் ஆண்டு ஆத்ம கௌரவம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே. விஸ்வநாத். இப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. சலங்கை ஒலி, சாகர சங்கமம் உள்பட பல புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் கே.விஸ்வநாத். உடல் நலக்குறைவு ஏற்பட்டு பிப்ரவரி 2 அன்று இயற்கை எய்தினார்.
மயில்சாமி: சிறந்த காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும், திகழ்ந்தவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். தனக்கென்று தனி அடையாளத்தை கொண்டவர். இல்லை என்று கூறுபவர்களுக்கு உதவி செய்யும் கொடைவள்ளல். இவர் இயல்பாகவே இரக்க குணம் கொண்டவர். ஓடி ஓடி சென்று உதவுபவர் .இப்படிப்பட்ட மயில்சாமி தனது 57 வது வயதில் பிப்ரவரி 19ஆம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.
ஜூடோ ரத்தினம்: பல ரஜினி படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் இவர்தான். அதேபோல கமல்ஹாசனுக்கும் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார். முன்னணி நடிகர்களுக்கு பயிற்சிகள் கொடுத்தவர்.1200 படங்களுக்கு மேல் பயிற்சியாளராக இருந்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர். இவர் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் ஜனவரி 26ஆம் தேதி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
டி.பி கஜேந்திரன்: சிறந்த காமெடி நடிகராக அறியப்பட்ட இவர், இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் விசுவின் உதவியாளராக பணியாற்றியவர். இவர் 15 படங்களுக்கு மேல் இயக்கியும், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார் .இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது இருந்து உடல்நலக் குறைவால் இருந்து வந்த இவர் தனது 68 வது வயதில் பிப்ரவரி 5ஆம் தேதி உயிர்துறந்தார்.
நெல்லை தங்கராஜ்: பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். இவர் ஒரு நாடகக் கலைஞர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி நெல்லையில் காலமானார்.
வாணி ஜெயராம்: பழம்பெரும் பின்னணிப் பாடகி. இவர் கிட்டத்தட்ட 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். வாணி ஜெயராம் பன்மொழி கலைஞர். இவர் பல்வேறு ஆல்பம் மற்றும் பக்தி பாடல்களை பாடி உள்ளார். இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என அழைக்கப்பட்டவர். இவர் தனது 77 வது வயதில் பிப்ரவரி 4ஆம் தேதி உயிர்த் துறந்தார்.
நடிகர் சரத்பாபு: கே .பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. இவர் ப்ளாக் அண்ட் வைட் காலம் முதல் இன்று வரை தனது நடிப்பின் திறமையால் திரை உலகில் முத்திரை பதித்தவர். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் ,போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். முத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர். இவர் தனது 71 வது வயதில் மே 22ஆம் தேதி மரணமடைந்தார்.
மீரா விஜய் ஆண்டனி: நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள். மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மீரா இறக்கும்போது வயது 16தான். இவருடைய இறப்பு தமிழ் திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களின் வீடுகளிலும் மீராவின் மரணம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.