கேரள, பீகார், ஒடிசா மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்... ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு

Su.tha Arivalagan
Dec 24, 2024,10:12 PM IST

டில்லி : கேரளா, பீகார், ஒடிசா உள்ளிட்ட ஒரு 5 மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி திரெளபதி முர்மு. 


கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, பீகார் கவர்னராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் கேரள மாநில கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கான், பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.




ஒடிசா கவர்னராக இருக்கும் ரகுபர் தாஸின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.  மிசோரம் மாநில கவர்னராக இருக்கும் ஹரிபாபு, ஒடிசா மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். '


ஆளுநர் மாற்றத்தில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நடந்த ஆளுநர் மாற்றத்தின் போதும் தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்என் ரவி இட மாற்றம் செய்யப்படவில்லை. பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடித்து வருகிறார். இன்று தான் பிரதமர் நரேந்திர மோடி ஆர் என் ரவி சந்தித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்