தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

Meenakshi
Apr 11, 2025,04:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருகிற ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்கலாம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் வெவ்வேறு மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு அமல்படுத்துள்ளது. இந்த தடைக் காலம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையில்  ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்தாண்டிற்கான தடைக்காலம் வருகிற 15ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை  தடை விதித்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களும் விசைப்படகு மற்றும் இழுவை படகு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.




இந்த 2 மாத காலங்களில் தூத்துக்குடி முதல் சென்னை வரையுள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 8,000த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்படும். படகுகள் கடலுக்குச் செல்லாத நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8000 வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.