கூடியது 18வது லோக்சபாவின் முதல் கூட்டம்.. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட எம்.பிக்கள் பதவியேற்பு

Aadmika
Jun 24, 2024,11:21 AM IST

டில்லி : 18வது லோக்சபாவின் முதல் பார்லிமென்ட் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதியான இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர். முன்னதாக லோக்சபா கூடியபோது, அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் இட்டு போராட்டம் நடத்தினர்.


லோக்சபா தேர்தல் நிறைவடைந்து மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான புதிய அரசின் புதிய பார்லிமென்ட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று காலை தற்காலிக சபாநாயகராக பத்ருஹரி மஹதாப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.




இதையடுத்து லோக்சபா கூட்டம் தொடங்கியது. சபை கூடியதும், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளதாக கொடுத்த கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக இடைக்கால சபாநாயகர் மஹதாப் அறிவித்தார். அதன் பிறகு புதிய எம்.பிக்கள் பதவியேற்பு தொடங்கியது. முதலில் பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார்.


இன்று துவங்கி, ஜூலை 03ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெற உள்ளது.  ஜூன் 27ம் தேதி லோக்சபா மற்றம் ராஜ்யசபாவின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார். 


18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடராக இருந்தாலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்று, முக்கிய துறைகளின் பொறுப்புகளில் ஏற்கனவே இருந்த அமைச்சர்களே தற்போதும் நீடிக்கிறார்கள். இதனால் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், மேற்குவங்க ரயில் விபத்து, ரயில் பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட ரயில்வே துறை விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முதல் லோக்சபா கூட்டத் தொடரே பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பட்ஜெட் எப்போது?




இதற்கிடையில் நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய அரசு எப்போது தாக்கல் செய்ய உள்ளது என்பது பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த ஆட்சி முடிவடையும் நிலையில் இருந்ததாக பிப்ரவரி 01 ம் தேதி இடைக்கால பட்ஜெட்டையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டாலும் மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்த தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட்டில் இடம்பெற போகும் விஷயங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், துணை முதல்வர்கள், நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். 


மத்திய பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார ஆலோசகர் தலைமையில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024-25ம் ஆண்டிற்கான மத்திய முழு பட்ஜெட்டில் மக்களின் வரித்துறை குறைப்பதற்காக வரி தள்ளுபடி, வரி விகிதம் குறைப்பு, குறிப்பாக ஜிஎஸ்டி.,யில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மோடி 3.ஓ அரசின் முதல் பட்ஜெட் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.