மதுரை.. தனியார் மருத்துவமனையில்.. பெரும் தீ விபத்து.. செயல்பாட்டில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்ப்பு

Manjula Devi
Dec 31, 2024,10:44 AM IST

மதுரை: மதுரை  தனியார் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் இந்த தனியார் மருத்துவமனை தற்போது செயல்பாட்டில் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 


மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டனர். தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.




முன்னதாக இந்த மருத்துவமனை தற்போது   செயல்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏற்கனவே நோயாளிகள் வேறு கட்டிடத்திற்கு  மாற்றப்பட்டுள்ளனர். செவிலியர்கள் மட்டுமே தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இன்று அதிகாலை என்பதால் செவிலியர்கள் அனைவரும் பணிபுரிய சென்று விட்ட நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை. 


விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த தனியார் மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.


இப்படித்தான் திண்டுக்கல்லிலும் சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. தற்போது மதுரையில் நடந்துள்ளது. இதே மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்தது என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்