Interim Budget 2024: நிர்மலா சீதாராமன் என்னெல்லாம் அறிவிப்பார்.. இதுக்கெல்லாம் வாய்ப்பிருக்காமே!

Meenakshi
Jan 29, 2024,06:07 PM IST

புதுடில்லி: 2024-2025ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2024-2025ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட் வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்க ஆட்சி அமைக்கும் வரை மட்டும்  நடைமுறையில் இருக்கும். 


மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய அரசாங்க அமைய உள்ளதால், அது வரையிலான காலகட்டத்திற்கு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்க வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




ஏற்கனவே 5 முறை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் 6வது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2வது பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் தலைமையிலான சிறப்பு குழு தீவிரமாக இந்த பட்ஜெட்டை தயாரித்து வருகிறது. 


இந்த இடைக்கால பட்ஜெட் நிதி ஆண்டின் ஆரம்ப மாதங்கள் மற்றும் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமையும் வரை உள்ள நடவடிக்கைகளுக்காக அமைவதாகும். இந்த பட்ஜெட் அரசின் வருமானம் மற்றும் செலவினங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.  2024-2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 


அல்வா கிண்டும் நிகழ்வு


இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கும். மத்திய பட்ஜெட் என்றாலே அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும். அந்த நிகழ்வு ஜனவரி 24ம் தேதி நடைபெற்றது. இந்த வழக்கம் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இடைக்கால பட்ஜெட்டில் பிரதமரின் சூரியோதயா திட்டத்துக்கு ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மிகப் பெரிய திட்டமாக இதை பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதுதவிர மேலும் சில முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவையும் இடம் பெறலாம் என்று தெரிகிறது.