ராதிகா முதல் நமீதா வரை.. விந்தியா டூ ஆர்த்தி கணேஷ்கர் வரை..சுழலும் சினி ஸ்டார்கள்.. கலக்கும் களம்!

Manjula Devi
Apr 10, 2024,05:54 PM IST

சென்னை: பிரச்சாரக் களத்தில் ஸ்டார்கள். அதிலும் நடிகை ராதிகா சரத்குமார் முதல்..நேற்று பாஜகவில் இணைந்த நடிகை ஆர்த்தி கணேஷ்கர்   வரை.. செம கலக்கலாக போய்க் கொண்டிருக்கிறது தேர்தல் பிரச்சாரம்.


ஒரு பக்கம் படு சூடாக ஆண் தலைவர்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், படு கூலாக பெண்களின் படையும் பிரச்சாரக் களத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நடிகர் நடிகைகள், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்து பிரச்சார களத்தில் குதித்து வருகின்றனர். நடிகர் நடிகைகளை பிரச்சார களத்தில் இறக்குவதால் இவர்களை காண  திரளான மக்கள் கூட்டம் வரும். மேலும் நடிகர் நடிகைகள் நடனம் ஆடி, பாட்டு பாடி, டயலாக் பேசிக்கொண்டு ஜாலியாக, சுவாரஸ்யமாக பிரச்சாரம் செய்வதால் மக்களை எளிதில் கவர முடியும். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சியை  சார்ந்தவர்கள் அதிக வாக்குகளை சேகரிப்பதற்காக மிகப் பெரும் நட்சத்திர பட்டாளங்களை தேர்தல் களத்தில் இறக்குகின்றனர்.


குட்டி நடிகர் நடிகைகள் முதல் பிரபலங்கள் வரை ஒவ்வொரு கட்சியிலும் இதற்காகவே ஒரு படையை திரட்டி வைத்திருப்பார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு செம டிமாண்ட் இருக்கும். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 




அதிமுகவைப் பொறுத்தவரை நடிகை விந்தியா முன்கூட்டியே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். அதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா ரோடு ஷோ மூலம் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். பளிச்சென தெள்ளத் தெளிவாக, நிறுத்தி நிதானமாக அவர் பாயின்ட் பாயின்ட்டாக பேசுவதால் அவரது பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் கூடுகிறது.


பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை நமீதாவும் களம் குதித்துள்ளார். கடந்த வெள்ளத்தின்போது திமுக பிரமுகர் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்ட நமீதா, திமுக அரசுக்கு நன்றி கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தனது பிள்ளைத் தமிழில் ஜாலியாக பேசி வாக்கு சேகரிக்கிறார் நமீதா. எழுதி வைத்த பெரிய அட்டையைப் பார்த்தபடி அவர் பேசினாலும் கூட, அவர் பேசும் அந்த அழகுத் தமிழை ரசிக்கவே கூட்டம் கூடுகிறது.


அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதுரையில் நடனம் ஆடிக்கொண்டே கலகலப்பான முறையில் வாக்கு சேகரித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இருந்தவர். தற்போது அதிமுகவில் இருக்கிறார். புள்ளிவிவரங்களை அடுக்கி இவர் பேசுவதை பலரும் ரசிக்கிறார்கள். 


சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை ராதிகா சரத்குமார், அவரே ஒரு வேட்பாளராகியுள்ளார். தான் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் அவரை நம்பி அவரே பிரச்சாரம் செய்து வருகிறார். கூடவே அவரது கணவரும் சுப்ரீம் ஸ்டாருமான சரத்குமாரும் நாடி நரம்பு புடைக்க பேசுகிறார். அவர் முழுங்கும் அந்த "பாரத் மாதி கி ஜெய்" கேட்கவே வித்தியாசமாக இருப்பதால் அதையும் ரசிக்கிறார்கள் மக்கள்!


நேற்று பாஜகவில் இணைந்த நடிகை ஆர்த்தி கணேஷ்கர் விரைவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். நேற்றே அவர் பாஜக அலுவலகத்தில் வைத்து பட்டையைக் கிளப்பும் வகையில் ஒரு குட்டி டாக்கையும் வெளிப்படுத்தினார். அதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை வெகுவாக புகழ்ந்து பேசினார் ஆர்த்தி.


மறுபக்கம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான  காமெடி நடிகர் கூல் சுரேஷ் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து காய்கறி விற்றுக் கொண்டே வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்தார். காய்கறி விற்றதோடு கூடவே பூவையும் விற்று கலகலக்க வைத்தார் கூல் சுரேஷ்.


நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சார அலப்பறைகளை சொல்லவே வேண்டாம். இதுபோன் அலப்பறைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நம்ம பாய்தான்!... ஜாக்கிங் செய்தபடியும், டான்ஸ் ஆடியபடியும், கறிக்கடையில் கறி வெட்டிக்கொண்டும், ரிக்ஷா ஓட்டிக்கொண்டு, பலாப்பழத்தை பைக்கில் கட்டிக் கொண்டும் என  தினுசு தினுசான வடிவங்களில் பிரச்சாரம் செய்து  மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


நம்ம ஊரில்தான் இப்படி என்றால் வடக்கிலும் கூட இதேபோலத்தான் கலகலக்க வைக்கிறார்கள் நடிகர் நடிகையர். மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி டிராக்டரில் ஏறி உட்கார்ந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். இதனை தொடர்ந்து அங்கு வயலில் வேலை செய்யும் பெண்களுடன் தானும் சேர்ந்து நெற்கதிர்களை அறுவடை செய்து கொண்டே வாக்கு சேகரித்தார்.


தேர்தல் முடியும் வரை இப்படித்தான் ஒரே ஜாலியா இருக்கும்.. ரசிப்போம்.. காசா பணமா!