"என் மகன் எப்படியாச்சும் நடிகனாய்ரணும்".. சாதனையாளராக பார்த்து விட்டு மறைந்த நாசர் தந்தை!

Meenakshi
Oct 11, 2023,10:09 AM IST

செங்கல்பட்டு: தனது மகனை நடிகனாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை சாதித்து விட்டு தனது 95 வயதில் மறைந்துள்ளார் நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா.


செங்கல்பட்டு தட்டான்மலை தெருவை சேர்ந்தவர் மாபுப் பாஷா. 95 வயதாகும் இவர் நடிகர் நாசரின் தந்தை ஆவார். நகைகளைப் பாலிஷ் செய்யும் தொழில் பார்த்து வந்தவர் மாபுப் பாஷா. ஆனால் தனது மகன் நாசரை நடிகனாக பார்க்க ஆசைப்பட்டார். இதனால் அவரை நடிப்புக்காக முயற்சிக்குமாறு ஊக்குவித்தார்.




ஆனால் நாசருக்கோ நடிப்பில் ஆர்வம் இல்லை. ஆனாலும் தந்தையின் ஆசைக்காக நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக கொஞ்சமும் விருப்பமில்லாமல் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார் நாசர். நடிப்புப் பயிற்சி  முடித்த நாசர் வாய்ப்பு தேடி அழைந்தார். வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்தார். 


எதுவும் சரிப்பட்டு வராமல் சொந்த ஊர் திரும்பினார். அப்போதும் தனது மகனை தேற்றி ஊக்கம் கொடுத்து மீண்டும் முயற்சி செய் என்று தட்டிக் கொடுத்தார் மாபுப் பாஷா. மீண்டும் தந்தையின் ஆசைக்காக வாய்ப்பு தேட ஆரம்பித்த நாசர் இந்த முறை தனது முயற்சியில் வெற்றி பெற்றார். வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தனித்தன்மையுடன் கூடிய நடிகனாக உருவாகினார். 


தான் ஏழையாக இருந்தாலும் தனது கனவில் "ரிச்" ஆக இருந்ததால் மாபுப் பாஷா ஜெயித்தா். ஏழை தந்தையின் கனவில் நடிகனாக ஆரம்பத்தில் தேன்றிய நாசார் நிஜ உலகிலும் மாபெரும் நடிகனானார். தமிழ் திரையுலகில் வில்லன், ஹீரோ, குணச்சித்ரம், இயக்குனர், தாயாரிப்பாளர்  என பன்முகத்தன்மையுடன் திகழ்ந்தவர் நாசர். தற்போது, நடிகர் சங்க தலைவராகவும் இருக்கிறார். 


நாசரின் இன்றைய நிலைக்கு அன்றே விதை போட்டவர் மாபுப் பாஷா. அவரது மறைவு நாசரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  செங்கல்பட்டில் உள்ள நாசரின் தம்பி வீட்டில் வசித்து வந்த நிலையில் மரணத்தைத் தழுவியுள்ளார் மாபுப் பாஷா. அவரது மறைவி்ற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.