தமிழ்நாடு, புதுச்சேரியில்.. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் இன்றே கடைசி
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலும் இன்றே முடிவடைகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் சுமாராக போய்க் கொண்டிருந்த மனுத்காகல் நேற்று முன் தினம் பங்குனி உத்திரம் அன்று சூடு பிடித்தது. அன்று நல்ல நாள் என்பதால் மாநிலம் முழுவதும் பெருமளவில் வேட்பு மனுக்கள் தாக்கலாகின.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், திமுக பொதுச்செயலாளர் கனிமொழி, விஜய பிரபாகரன், ராதிகா சரத்குமார், அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், ஜெயவர்த்தன் உள்ளிட்ட முன்னணி கட்சியைச் சார்ந்தவர்களும், சுயேட்சையாக போட்டியிடுபவர்களும் அந்தந்த தொகுதிகளில் நான், நீ என முந்திக் கொண்டு வேப்புமனு தாக்கல் செய்து வந்தனர். நேற்று வரை 700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. வேட்டபுமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்றை விட இன்று வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.