அதிர வைக்கும் தில் சாந்தி.. பக்கத்தில் வந்து நின்று.. அலேக்காக சுடுவதில் கில்லாடி.. தி.நகரில் கைது!

Manjula Devi
Aug 05, 2024,04:50 PM IST

சென்னை:  தி. நகர் ரங்கநாதன் தெருவில் துணி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஹேண்ட் பேக்கில் இருந்த  பணத்தை லாவகமாக திருடிய பிரபல பிக் பாக்கெட் பெண் தில் சாந்தியை கையும் களவுமாக  பிடித்து போலீசார் கைது செய்தனர்.


தி நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று மாலை உஷாராணி என்பவர் தனது மகளுடன் சேர்ந்து துணி எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல பிக்பாக்கெட் பெண் ராணி என்ற தில் சாந்தியும் அங்கு வந்துள்ளார். உஷாராணி மகள் ஹேண்ட் பேக்கில் 13 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஹேண்ட் பேக்கில் உள்ள பணத்தை எப்படி எடுப்பது என ஸ்கெட்ச் போட்டு ஹேண்ட் பேக்கை நோட்டமிட்டுள்ளார்.




பின்னர் சந்தர்ப்பம் பார்த்து பேக்கில் இருந்த 13 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்ணிமைக்கும் நொடியில் திருடினார். ஆனால் கைப்பையிலிருந்து பணத்தை தில் சாந்தி எடுத்ததைப் பார்த்து விட்ட உஷாராணி உடனே கூச்சலிட்டு, அருகில் இருந்தவர்களின் துணையுடன் தில்சாந்தியை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். இதன்பின் அவரை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தில்சாந்தியிடம் விசாரணை செய்த போலீஸார், அவர் கைப்பையிலிருந்து பணத்தை எடுத்ததை உறுதி செய்தனர். பின்னர் தில் சாந்தி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


யார் இந்த தில் சாந்தி?


மாம்பலம் ஸ்ரீனிவாச நகர் 4வது தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மனைவி தான் தில்சாந்தி. இவருக்கு வயது தற்போது 53. 25 வயது முதலே திருட்டுப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திருடி வந்ததால் கணவர் செல்வராஜ், தில் சாந்தியை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். பிள்ளைகள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. 


பண்டிகை காலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பர்தா அணிந்து கொண்டு தனது கைவரிசையை காட்டி வருவது தில் சாந்தியின் வழக்கம். ஆண்களின் பர்ஸ்சுகளை பிக்பாக்கெட் அடிப்பதிலும் பலே கில்லாடி. அதேபோல் திருமணம் மண்டபங்களில் உறவினர்கள் எனக் கூறி நகை பணங்களை கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலமுறை கைதும் ஆகியுள்ளார் தில் சாந்தி.