நாங்களும் தனித்து போட்டி.. பரூக் அப்துல்லா போட்ட குண்டு.. காஷ்மீரில் வெலவெலக்கும் இந்தியா கூட்டணி?

Aadmika
Feb 16, 2024,05:46 PM IST

டில்லி : ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தற்போது ஃபருக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்து போட்டி என அறிவித்துள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 


மத்தியில் தொடர்ந்து இரண்டு முறையாக ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 3வது முறையாக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தேசிய அளவில் மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்து, வலுவான எதிர்க்கட்சியை அமைத்தன. இந்த கூட்டணியில் மொத்தம் 32 கட்சிகள் இருந்தன. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில், திடீரென கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது.




அடுத்தடுத்து விலகும் கட்சிகள்: ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டி என அறிவித்தன. ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரோ இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதுடன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடனே போய் சேர்ந்து விட்டார்.


இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது. சோனியா காந்தியின் ரேபரிலி தொகுதியில் அவருக்கு பதிலாக 2024 லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.


பரூக் அப்துல்லா பிடிவாதம்: இந்நிலையில் தற்போது ஃபருக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியும் வரும் லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் காஷ்மீரில் உள்ள 5 லோக்சபா தொகுதிகளிலும் தங்கள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாகவும் ஃபருக் அப்துல்லா அறிவித்துள்ளார். அதே சமயம் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் முடிவு எடுக்கப்படலாம் என்றம் அவர் தெரிவித்துள்ளார். 


தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் இந்தியா கூட்டணியில் இல்லாமல் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட ஃபருக் அப்துல்லா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது அனந்த்நாக், ரஜவுரி ஆகிய தொகுதிகளில் தங்களுக்கு நல்ல அடித்தளம் உள்ளதால், அந்த தொகுதிகளை தங்களுக்கு விட்டுத் தரும் படி காங்கிரஸ் கேட்டதாம். ஆனால் காங்கிரசின் கோரிக்கை கொஞ்சம் கூட நியாயம் இல்லாமல் இருப்பதாக தேசிய மாநாட்டு கட்சி கருதுகிறதாம். 




2 தொகுதிகளால் பிரச்சினை:  2014 லோக்சபா தேர்தலிலும் அனந்த்நாக், ரஜவுரி, ஸ்ரீநகர் ஆகிய தொகுதிகளை கேட்டு வாங்கிய காங்கிரஸ், அந்த தொகுதிகளில் 2வது இடத்தை தான் பிடித்தது. இந்த முறை தாங்கள் ரஜவுரியில் பலமாகி விட்டதாகவும், பூஞ்ச் தொகுதியையும் சேர்த்து தர வேண்டும் என கேட்டுள்ளது. கடந்த முறை தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டது. ஆனால் இந்த முறை தெற்கு காஷ்மீரில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டால், நாட்டு கட்சியும் இந்தியா கூட்டணியில் இருப்பதால் ஸ்ரீநகர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிக ஓட்டுக்களை அள்ளி விடலாம் என காங்கிரஸ் நம்புகிறது.


வெறும் இரண்டு இடங்களில் மட்டும் ஜம்முவில் போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளால் எந்த பலனும் ஏற்படாது என காங்கிரஸ் நினைக்கிறதாம். அதனால் கூட்டணி கட்சிகளை நம்பாமல் கடந்த வாரம் ஜம்முவில் கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு ஆலோசனை நடத்திய காங்கிரஸ், கட்சி தலைவர்களும் தொண்டர்களும், காஷ்மீரில் உள்ள 5 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கும் படி கூறி உள்ளது.


தங்களுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஒரு புறம் நடத்தி விட்டு, மறுபுறம் கூட்டணி கட்சிகளுக்கு தெரியாமல் தனித்து  போட்டியிடவும் காங்கிரஸ் திட்டமிடுவது தெரிந்து கொண்டதால் தான் ஃபருக் அப்துல்லா, இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்து போட்டி என்ற முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. 


பலம் இழக்கும் இந்தியா கூட்டணி: இந்தியா கூட்டணியில் இருக்கும், வட மாநிலங்களில் பலம் வாய்ந்த கட்சிகள் ஒவ்வொன்றாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி வருகின்றன. இன்னும் தேர்தல் தேதி அறிவித்து, மற்ற மாநிலங்களில் பங்கீடு பேசி முடிவதற்குள் இன்னும் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக போகிறதோ தெரியவில்லை என தேசிய அரசியல் களத்தில் பேச்சாக உள்ளது.


கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக விலகுவது இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.