"தளபதி இல்லாத சினிமாவை நினைச்சுக் கூட பார்க்க முடியல".. சோகத்தில் மூழ்கிய விஜய் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலை குறி வைத்து செயல்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அதற்குள் தனது சினிமா படங்களை முடித்து விட்டு முழுமையாக சினிமாவில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளதால், அடடா இனிமேல் தளபதியை சினிமாவில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நட்சத்திரங்களில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்கள் சமீபகாலமாகவே வசூல் வேட்டையிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இவரது ஒரு சில சுமாரான படங்கள் கூட நல்ல வசூல் கிடைத்திருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியதுடன், வசூலிலும் முன்னணியில் இருந்தது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நபராகவும் விஜய் இருந்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம், நடிகர் விஜய் 2009ம் ஆண்டு நற்பணி மற்றும் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக மாற்றினார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். சமீபகாலமாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை இந்த இயக்கத்தின் மூலமாக செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்தின் போதும் 2026ம் ஆண்டு சட்ட மன்றம் குறித்த கேள்விக்கு கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி தனது அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்பதை தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் சென்னை பனையூரில் விஜய் அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை குறித்து விஜய் எந்த வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் நிர்வாகிகள் தரப்பில் இருந்து பிப்ரவரி மாதம் கட்சி குறித்து அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்.
இது ஒரு புறம் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும். அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் விஜய். தான் தற்பொழுது கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த பிறகு, சினிமாவை விட்டு விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல அதன் நீள அகலத்தையும் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள எம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களை படித்து நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளைக் கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் இப்பொழுதே மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். சூப்பர் ஸ்டார் நடிகர், சினிமாவில் இருந்து விலகுவது என்பது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளதாகவும், ரசிகர் இதனால் ஏமாற்றமடைவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு சில ரசிகர்கள் அரசியலில் இருந்து கொண்டே சினிமாவிலும் நடித்தால் நல்லது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.